
மரணம் என்பது எப்போது, யாருக்கு, எப்படி நிகழும் என்று யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் இயற்கையாக, எதிர்பாராவிதமாக மரணங்கள் நிகழும். சில சமயங்களில் சக மனிதர்களின் அலட்சியத்தால், கவனக்குறைவால் மரணம் நிகழும். அப்படி அலட்சிய போக்கால் பலியானவர் தான் 41 வயது தீபா. கோடம்பாக்கம் வாசுபுரம் பகுதியில் வசித்து வந்த தீபா நேற்று இரவு 12.10 மணியளவில் சூளைமேடு வீரபத்திரன் கோயில் வழியாக நடந்து சென்றுள்ளார்.
அந்த சாலையில் ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் மழை நீர் வடிகாலுக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. அதில் ஒரு குழி முறையான பாதுகாப்பு இல்லாமல், மரத்தால் ஆன மூடியை கொண்டு மூடப்பட்டிருக்கிறது.
இதனை அறியாத தீபா எதிர்பாராதவிதமாக அந்த குழியில் கால் வைத்தவுடன் பளு தாங்காமல் மூடி உடைந்து உள்ளே விழுந்திருக்கிறார். விழுந்ததில் அவரின் நெற்றி பொட்டில் அடிபட்டிருக்கிறது. அவர் உடலிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் காயங்களோடு தீபா உயிருக்கு போராடி இறந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் அவர் விழுந்ததை கவனிக்கவில்லை.
காலையில் பள்ளி மாணவர் ஒருவர் தான் தீபாவின் உடலை பார்த்திருக்கிறார். அதன் பிறகு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
“எதிர்பாராமல் அவர் குழிக்குள் விழுந்தால்தான் அவரின் உயிர் பிரிந்துள்ளது. CCTV -காட்சிகளும் அதைத்தான் நிரூபிக்கின்றன. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளில் கிடைக்கும் தெரு
அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அந்த தெருவில் போதிய தெரு விளக்கு வெளிச்சம் இல்லை, தெருவின் சில இடங்கள் இன்னும் இருட்டாக இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மாநகராட்சி சொல்வதென்ன?
வடகிழக்கு பருவமழை ஏற்படும்போது வடிகாலில் அடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக பெரும்பாலான சாலைகளில் 5 மீட்டர் இடைவெளியில் குழிதோண்டுவது வழக்கம். ஆனால் அந்த குழி வெறும் 2 அடி மட்டும் தான் தோண்டப்பட்டிருக்கும். அதிலும் அரை அடி மட்டுமே நீர் நிரம்பியிருக்கும். இதில் விழுந்து அந்த பெண் எப்படி பலியானார் என்பது குறித்து நாங்களும் விசாரித்து வருகிறோம்.” என மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளது.
எத்தனை சாக்குபோக்குகள் சொல்லப்பட்டாலும், மரத்தால் ஆன மூடியை கொண்டு வடிகாலை அடைத்ததற்கும், விளக்கில்லாமல் தெருவே இருட்டிக்கிடப்பதற்கும் எந்த காரணமும் சொல்ல முடியாது. அரசும் அதிகாரிகளும் இந்த பிரச்னையை முறையாக கையாளவேண்டும். இதில் அலட்சியப்போக்கோடு செயல்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.