மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண், கடந்த வியாழக்கிழமை மாலை தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியாலாவைச் சேர்ந்த டிம்பிள் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், குற்றம் சாட்டப்பட்ட ஹர்விந்தர் மான் என்பவருடன் சேர்ந்து ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் அங்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் முன்பு காதல் உறவில் இருந்ததாகவும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹர்விந்தர் மீண்டும் உறவை புதுப்பிக்க முயன்று வந்ததாகவும், அதே சமயம் டிம்பிள் தன்னிடம் இருந்து விலகியிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
வியாழக்கிழமை (மே 04) மாலை, டிம்பிள் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது ஹர்விந்தர் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாகவும், அதன்போது ஹர்விந்தர் கத்தியால் டிம்பிள் மீது தாக்குதல் நடத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த ஊழியர்களிடையே பதற்றம் உருவாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஹர்விந்தர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரையும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே டிம்பிள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், ஹர்விந்தர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலையைப் பொறுத்து, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன், சம்பவங்களின் நோக்கம் தெளிவாகத் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்