

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி 63 இவர் கடந்த 15 வருடங்களாக அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் கோவிந்தசாமிக்கு அறிமுகமான பத்மா என்பவர் தன்னிடம் மரம் இருப்பதாக கூறி கொடுங்கையூர் சூழல் புனல் கரை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பத்மாவும் கோவிந்தசாமியும் வீட்டிற்குள் சென்றவுடன் அங்கு நின்று கொண்டிருந்த பத்மாவின் தோழி எஸ்தர் நான்சி என்பவர் கதவை பூட்டி உள்ளார். உடனே பத்மா கோவிந்த சாமியை திட்டி அவரது ஆடைகளை கழட்டி தாங்கள் வைத்திருந்த கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்பொழுது எஸ்தர் நான்சி மற்றும் அவரது கணவர் முன்னா கருப்பையா ஆகியோரும் வந்து கோவிந்தசாமியை மிரட்டியுள்ளனர்.
“இந்த வீடியோ வெளியே போகாமல் இருக்க 5 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம்” என மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி பணத்தை தயார் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பத்மா என்பவரிடம் கோவிந்தசாமி நட்பாக பழகி வந்ததும், அடிக்கடி பத்மாவுக்கு பண உதவிகள் செய்து வந்ததும் தெரியவந்தது. கோவிந்தசாமியிடம் பணம் உள்ளதை அறிந்து கொண்ட பத்மா அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க அவரை தனியாக வரவழைக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் எஸ்தர் நான்சி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று கொடுங்கையூர் எருக்கஞ்சேரி மூலக்கடை ஜிஎன்டி ரோடு பகுதியைச் சேர்ந்த பத்மா (47) கொடுங்கையூர் சூழ்ப்புணல் கரை அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த எஸ்தர் நான்சி (30), இவரது கணவர் முன்னா கருப்பையா (33) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் எஸ்தர் நான்சி ஆந்திராவில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கோவிந்தசாமியை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இதனை யடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.