"எனக்கு இல்லாத உன்ன யாருடனும் வாழ விட மாட்டேன்" – பல்லாவரத்தில் அத்தை மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற இளைஞர்!

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
pallavaram murder case
Published on
Updated on
1 min read

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில், திருமணமான பெண்ணை அவரது அத்தை மகன் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அனகாபுத்தூர் சத்யா நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மகிஷா- 26 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாக ரேஷ்மா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரேஷ்மாவின் அத்தை மகனான விஜி அடிக்கடி அவரை சந்தித்து பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மகிஷாவின் வீட்டிற்கு சென்ற விஜி, அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, "என்னுடன் வாழவில்லை என்றால் யாருடனும் வாழ விட மாட்டேன்" என்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயந்துபோன மகிஷா, அருகில் வசித்து வந்த தனது தோழி மரியா மற்றும் அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரை துணைக்கு அழைத்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்த விஜி, கதவைத் திறக்குமாறு தட்டியுள்ளார். வீட்டில் இருந்த பெண்கள் கதவைத் திறந்தவுடன், முன்கூட்டியே கொண்டு வந்திருந்த பெப்பர் ஸ்பிரேயை அவர்களின் முகத்தில் தெளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் நிலைதடுமாறிய நிலையில், கத்தியுடன் இருந்த விஜி நேராக ரேஷ்மாவை நோக்கி சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். தூக்கக் கலக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே, மகிஷா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். தாக்குதலுக்குப் பிறகு விஜி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

படுகாயமடைந்த மகிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கர் நகர் காவல்துறையினர், மகிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள விஜியை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com