
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் 23 வயதான தீனதயாளன். இவர் பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த லாஜியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் தற்போது தீனதயாளன் ஐடி நிறுவனத்திலும் லாஜியா அழகு நிலையத்திலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும் தங்களது காதலை பற்றி இருவரது பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளனர். லாஜியா வீட்டில் இவர்களது காதலை ஏற்று கொண்ட நிலையில் தீனதயாளன் வீட்டில் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். ஆனால் அதையும் மீறி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் லாஜியா தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் மீண்டும் தீனதயாளனுக்கும் லாஜியாவிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் கோபமடைந்த லாஜியா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். காதல் மனைவியை பிரிந்து வாழ முடியாத தீனதயாளன் அவரை சமாதான செய்து தன்னுடன் அழைத்து வர முடிவு செய்துள்ளார்.
எனவே காதலியின் வீட்டிற்கு சென்ற தீனதயாளன் அவரிடம் சென்று இனி இதுபோல நடக்காது என்னுடன் வந்துவிடு என அழைத்துள்ளார், தீனதயாளனுடன் செல்ல மறுத்த லாஜியா அவரை திட்டி உதாசீனம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த தீனதயாளன் லாஜியாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள சேக்காடு ஆவடி மாநகராட்சி சுரங்கப்பாதையின் மீது ஏறி தனது காதலிக்கு போன் செய்து “உனக்காக தான் நான் எல்லாரையும் விட்டுட்டு வந்த ஆன இப்போ நீயும் இப்படி பண்ற, அப்போ என் கூட வாழ வரமாட்டிய” என கூறி காதலி கண் முன்னே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் தீனதயாளனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீனதயாளனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை அறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஆவடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். திருமணமான இரண்டு மாதங்களில் தீனதயாளன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.