

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே தண்டையார் குளத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சினிமா துறையில் கேண்டீன் சப்ளையராக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது இவருக்கும் பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தினேஷ் மகான் மற்றும் பூவே பூச்சூடவா போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் மற்றும் பிக்பாஸில் பங்குபெற்ற பிரபலமடைந்து இருந்தார்.
எனவே கருணாநிதி Bsc படித்திருக்கும் தன்னுடைய மனைவியை நித்திய கல்யாணிக்கு வேலை தேடிக் கொண்டிருப்பதாக தினேஷிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு தினேஷ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் தனக்கு அங்கு ஆட்கள் இருப்பதாகவும் அதற்கு ரூபாய் 10 லட்சம் வரை தேவைப்படும் அட்வான்ஸ் ஆக ரூபாய் 3 லட்சம் வேண்டும் என கேட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனை நம்பி அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 2022 ஆம் வருடம் பணகுடி அருகே உள்ள தனது சொந்த ஊரான தண்டையார் குளத்தில் 3 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார்.
பணத்தை வாங்கிக்கொண்டு தினேஷ் பின்னர் வேலை குறித்து எந்தவித தகவலை கூறாத நிலையில் இதுவரை அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனிடையே கடந்த (அக்டோபர் 23) ஆம் தேதி தினேஷ் வள்ளியூர் வந்த செய்தி கருணாநிதிக்கு தெரிய வந்திருக்கிறது.இதனை அடுத்து தினேஷை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதற்கு அவர் பணத்தை கொடுக்காமல் அவரை காரில் அழைத்துச் சென்று பணகுடி அருகே உள்ள அ.சாத்தான்குளம் என்ற ஊரின் அருகில் வைத்து தினேஷ் மற்றும் அவரது அப்பா மேற்படி இரண்டு பேர் சேர்ந்து கருணாநிதியை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அவர் அளித்த புகாரின் பெயரில் பிக் பாஸ் புகழ் தினேஷ் மற்றும் அவரது அப்பா ஆகியோர் மீது பணகுடி காவல் நிலையத்தில் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இன்று தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது இது குறித்து தினேஷ் “கருணாநிதி என தனக்கு யாரும் தெரியாது, நான் பணத்தை மோசடி செய்யவில்லை. அவரை நான் தாக்கியதாக சொன்ன நேரத்தில் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக ஆஜராகி இருந்தேன்” என பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.