புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி பெரிய மாடு சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும் சிறிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டிகளுக்கு ராயவரம் வரை போகவர 12 கிலோமீட்டர் தூரமும் சிறிய மாட்டு வண்டிகளுக்கு கோட்டையூர் வரை போக வர ஒன்பது கிலோமீட்டர் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. கடியாபட்டி கடைவீதியில் தொடங்கிய போட்டியில் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
விடுமுறை நாள் என்பதால் சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று போட்டியை ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்