சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு துறையினர் ராட்சச மின்விசிறி இயந்திரங்கள் ராட்சச குழாய்கள் கொண்டு அந்த புகைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் போலீசார் என அனைவரும் ஒன்றாக இணைந்து சென்னை விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் எமிரேட்ஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட டிக்கெட் கவுண்டர் பகுதிகளில் இருக்கும் ராட்சத கண்ணாடிகளை அகற்றப்பட்டு விமான நிலையத்திற்கு உள்ளே ஏற்பட்ட புகை மண்டலத்தை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் புறப்படும் விமானம் புறப்படுகிறதா? அல்லது தாமதமாக புறப்படுகிறதா? என்பது குறித்து அந்தந்த ஏர்லைன்ஸ் அலுவலர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த பின் தங்களது பயணத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படாத நிலையில் தீ விபத்தில் ஏற்பட்ட புகை காரணமாக சில பயணிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் மின்கசிவு மூலம் ஏற்பட்ட புகையை முழுவதுமாக வெளியேற்ற மாலை நேரம் வரை பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.