தமிழகம் முழுவதும் கல்வி, பொருளாதாரதில் மிகவும் பின்தங்கிய இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் பெரும்பாலும் ஆறு, குளம், குட்டை போன்ற கரையோர் பகுதிகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலையை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய மதிய மற்றும் மாநில அரசு அந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டவும் அரசாணை வெளியிட்டது. மத்திய மற்றும் மாநில அரசின் இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருளர் மற்றும் பழங்குடியின மகக்களுக்கு தமிழக அரசு நூற்றுக்கணக்கான தரமான கான்கிரீட் வீடுகளை கட்டி வழங்கியுள்ளது. ஆனால் மத்திய மற்றும் தமிழக அரசின் இதுபோன்ற நல்ல திட்டாங்களை சீர்குலைக்கும் சதிகள் சில அரசு அதிகாரிகள் உதவியுடன் ஆளும் கட்சியின் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடப்பதாக குற்றசாட்டுக்கள் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள குன்னவாக்கம் ஊராட்சி வண்டிவாக்கம் கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த இருளர் மற்றும் பழங்குடியின மக்களின் நிலையை அறிந்து தமிழக அரசு “பிரதான் மந்திரி ஜன் ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின்” கீழ் 2023 - 2024 நிதியாண்டில் சுமார் 50 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்களே அவர்கள் வீட்டை கட்டிக்கொள்ள பணியானை வழங்கப்பட்டது.
வீடு கட்டும் ஒவ்வொரு நிலையிலும் அரசு வழங்கும் தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் அரசு செலுத்தும் அந்த தொகையை ஒப்பந்ததாரர்கள் பயனாளிகள் மூலம் பெற்றுக்கொண்டு கட்டுமான பணிகளை செய்வார்கள். இதில் பயனாளிகள் குடும்பத்தில் ஒருவர் அந்த வீடு கட்டுமான பணியில் ஈடுபட வேண்டும், அதற்கு அவர்களுக்கு தினக்கூலி என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்ததாரர்கள் பயனாளிகளை பணியில் அமர்த்தாமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய தின கூலியையும், தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகையையும் ஏமாற்றி வீடு கட்ட ஒதுக்கீடு செய்த தொகையோடு பயனாளிகளின் அறியாமையை பயன்படுத்தி கையொப்பம் பெற்று வங்கி மூலம் மோசடி செய்து அப்பாகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய பணிகளை இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
வீடுகள் தரமாக கட்டப்படவில்லை என்றும், வீட்டின் மேல் தளத்தில் இருந்து மழை பெய்தால் நீர் கசிவு ஏற்பட்டு சொட்டுவதாகவும் அந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவரை மின்சாரம், குடிநீர், சாலை போன்ற எந்த வசதியும் செய்துதரவில்லை என்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கூறும் மக்களை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒப்பந்ததாரர்களிடம் போட்டு கொடுப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் அவர்களை மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அந்த அப்பாவி மக்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.