

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே முழுக்கு துறை என்ற கிராமத்தை சேர்ந்த வெற்றிவேலன் என்பவரது மகள் 21 வயதுடைய சிந்து ஐவரும் கிள்ளை வடக்கு பகுதியை சேர்ந்த திருஞானம் என்பவரின் மகனான 25 வயதுடைய உலகநாதன் என்பவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த ஒன்பது வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பட்டதாரியான உலகநாதன் சரியான வேலை கிடைக்காமல் அதே பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். சிந்துவும் உலகநாதனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை வெற்றிவேலன் மற்றும் பெண்ணின் அக்கா குடும்பத்தினர் அருள் வேந்தன், முல்லைவேந்தன், ஆகியோர் உலகநாதன் இடம் தொடர்ந்து பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பெண் வீட்டார் சார்பில் கிள்ளை காவல் நிலையத்தில் “ தங்களது மகளை காதல் தொல்லை செய்வதாக” புகார் அளித்திருக்கின்றனர். எனவே இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் உலகநாத்தை இன்று நேரில் அழைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உலகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரது உடலை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். அழுகை சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உலகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தற்கொலைக்கு முன்பு உலகநாதன் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் “என்னுடைய சாவுக்கு பெண் வீட்டை சேர்ந்த வெற்றிவேலன், முல்லைவேந்தன், அருள்வேந்தன், தான் காரணம் நானும் சிந்துவும் 9 வருடங்களாக காதலித்து வந்தோம். என்னை சிந்து வீட்டு ஆளுங்க ரொம்ப டார்ச்சர் பண்றாங்க நான் சாகப் போகிறேன் பெண் வீட்டார் தான் என் சாவுக்கு காரணம். ஐ மிஸ் யூ குடும்பம் பெண் வீட்டார் குடும்பத்தை சும்மா விடக்கூடாது” என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இந்த கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் தரப்பில் உலகநாதன் படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்த நிலையில் மது போதைக்கு அடிமையாகி இருந்ததால் காதலித்த பெண் அவரை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த காரணத்தால் தான் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் இருப்பினும் தொடர்ந்து உலகநாதன் காதலிக்குமாறு சிந்துவை தொல்லை செய்ததால் அவர்கள் புகார் அளித்ததாகவும் புகார் குறித்து விசாரணைக்கு வர சொன்ன போது தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்