
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய ஜாக்கப் ரெனிவர்கீஸ். இவர் கடந்த நான்கு வருடங்களாக செங்கல்பட்டு கானாத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைகழகமான அமிட் கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு தனது சொந்த மாநிலமான கேரளா மாநிலத்தில் வசித்து வந்தார். ஜாக்கப் ரெனிவர்கீஸ் சில பாடங்களில் (அரியர் வைத்துள்ளார்) தோல்வியுற்றதால் மீண்டும் தேர்வு எழுத சென்னை ஈசிஆர் வந்துள்ளார்.
ஜாக்கப் ரெனிவர்கீஸ் இன்று அரியர் தேர்வு எழுத இருந்த நிலையில் நேற்று இரவு தனது ஜூனியர் மாணவர் ஜஸ்வந்த் உடன் ஈசிஆர் சாலை கானத்தூர் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். டீ குடித்து விட்டு மீண்டும் தங்கும் விடுதிக்கு உத்தண்டியில் இருந்து கானத்தூர் நோக்கி பைக்கில் சென்ற ஜாக்கப் ரெனிவர்கீஸ் மாமல்லபுரம் நோக்கி செல்லும் பிரதான சாலையில் செல்லாமல் எதிர் திசையில் ஆபத்தான முறையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கிக் கொண்டு சென்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
பின்னர் வாகனத்தை ஜாக்கப் ரெனிவர்கீஸ் சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதியதில் ஜாக்கப் ரெனிவர்கீஸ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த ஜூனியர் மாணவர் ஜஸ்வந்த் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜாக்கப் ரெனிவர்கீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இதேபோல் திரையரங்கில் படம் பார்த்து விட்டு வந்த இளைஞர் சாலையில் இருந்த மாட்டின் மீது மோதியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் அதிகமாக சாலையில் சுற்றித் திரிவதாலும், சாலையில் படுத்துக் கொண்டிருப்பதாலும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சி 15 வது மண்டல அதிகாரிகள் மற்றும் கானத்தூர் ஊராட்சி அதிகாரிகள் ஈசிஆர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.