திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மற்றும் பிரசவமும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் துறையூர் திரௌபதி கோவில் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற கூலி தொழிலாளியின் மனைவி பெரியக்காள் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பெரியக்காள் இன்று தனது குழந்தையை காற்றோட்டமாக மடியில் வைத்து கொஞ்சி கொண்டு இருந்தபோது அங்கு முன் பின் தெரியாத பெண் ஒருவர் வந்து தான் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரை அங்குள்ளவர்கள் கழிவறை இருக்கும் இடத்தை காட்டி உள்ளனர். ஆனால் அந்தப் பெண் கழிவறை செல்லாமல் பெரியக்காளிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். “எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் உங்கள் குழந்தையை என்னிடம் கொஞ்ச நேரம் தர வேண்டும்” என்று கூறியுள்ளார். அதற்கு பெரியாக்காள் மறுத்த நிலையில் அவர் வைத்திருந்த கைப்பையில் பொடி போல இருந்த எதையோ எடுத்துள்ளார்.
இதனை கவனித்த அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் அடைந்து அவரை யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? என்று கேட்டபோது அந்தப் பெண் எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் அவர் தனது ஆண் நண்பருடன் மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இருவரையும் பிடித்து துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பதும் அவருடன் வந்த ஆண் நண்பர் துறையூர் அருகே உள்ள நாக நல்லூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பதும் தெரிய வந்தது. லட்சுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படும் நிலையில் துறையூர் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் துறையூர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. எனவே இங்கு பிரசவத்திற்கு பின் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.