
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் 40 வயதான செல்லப்பாண்டி. இவருக்கு திருமணமாகி சுபா என்ற மனைவியும் 16 வயதில் ஸ்ரீமதி என்ற மகளும், 12 வயதில் லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். செல்லப்பாண்டியன் மனைவி சுபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
எனவே மகள் ஸ்ரீமதி மற்றும் மகன் லோகேஷ் ஆகிய இருவரும் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி இறந்த விரக்தியில் இருந்த செல்லப்பாண்டி கோவை சென்று தனது மகள் மற்றும் மகனை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி உறவினர் வீட்டில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் மூவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்த நிலையில் தனது குழந்தைகளை மீண்டும் உறவினர் வீட்டில் விடாமல் செல்லப்பாண்டி அவர்களது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். தங்களது வீட்டிற்கு செல்கிறோம் என குழந்தைகள் மகிழ்ச்சியாக தந்தை செல்லப்பாண்டியுடன் சென்றுள்ளனர்.குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று செல்லப்பாண்டி மகள் மற்றும் மகன் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அருந்தி உள்ளார்.
பாலை மகள் ஸ்ரீமதி மட்டும் குடித்து நிலையில் மகன் லோகேஷ் விஷம் கலந்த பாலை குடிக்காமல் விளையாட சென்றுள்ளார். இதனை அந்த அக்கம் பக்கத்தினர் செல்லப்பாண்டி வீட்டிற்கு சென்று பார்த்த நிலையில் செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் மகள் ஸ்ரீமதி ஆபத்தான நிலையில் இருந்ததை அறிந்தவர்கள் ஸ்ரீமதியை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லப்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பெற்ற குழந்தைகளுக்கு தந்தையே விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.