கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே, வரதட்சணைக் கொடுமை தொடர்பாக அளித்த புகாரை போலீசார் ஏற்க மறுப்பதாகக் குற்றம்சாட்டு வைத்துள்ளார். பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது கணவரை பிடித்து வைத்திருப்பதாகவும், காவல் நிலையத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜதுரை – சிவகுமாரி தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, சிவகுமாரியின் மாமனார் மற்றும் நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு தன்னைத் துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சிவகுமாரி பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரைப் பெற்றுக்கொள்ளாமல் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகுமாறு போலீசார் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ராஜதுரையின் குடும்பத்தினர் கணவன் மனைவி இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது. எனவே ராஜதுரை அவரது குடும்பத்தினரிடம் தனக்கு சொந்தமான சொத்தை கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினருக்கு சொத்தை அளிக்க மறுத்து வந்திருக்கின்றனர்.
இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சிவகுமாரிக்கு ராஜதுரைக்கும் சொத்து கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த சொத்து மாமனார் பெயரில் இருந்ததால் சிவகுமாரி தனது மாமனாரிடம் பட்டா மாற்றத்திற்காகக் கையொப்பமிடுமாறு கேட்டபோது, அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜதுரை தனது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனை தனக்கு சதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜதுரையின் குடும்பத்தினர் அவர் மீது கொலை முயற்சி புகைரளித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் எதிர் தரப்பிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து ராஜதுரையை கைது செய்துள்ளதாக அவரது மனைவி குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில் திடீரென தனது மூன்று குழந்தைகளுடன் நேற்று முன்தினம் (அக் 15) ஆம் தேதி சிவகுமாரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். சொத்து கேட்டதற்காக தன் மீதும் தனது கணவர் மீதும் பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது மூன்று கைக்குழந்தைகளுடன் தங்குவதற்கு இடமின்றித் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் குறிப்பிட்டு, “விஜய் அண்ணா, உங்களுக்குத்தான் நான் வாக்களித்தேன். பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். லஞ்சம் வாங்குகிறார்கள். எனது கணவரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதனால் இந்தக் காவல் நிலையத்தில் ஆய்வு நடத்த வேண்டும்” என்று கூறி, கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிவகுமாரி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், புகார் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.