

சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின் போது, அப்ளைடு ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Applied AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான 'வின்சென் லேப்ஸ்' (Winsen Labs) நிறுவனர் தேஜஸ் பார்த்தசாரதி சுதர்சனுக்கு, பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு குறித்து இரண்டு முக்கிய ஐடியாக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைத்தது.
அவருக்கு அன்றைய பரபரப்பான நாளில் வெறும் 90 வினாடிகள் மட்டுமே பிரதமருடன் கிடைத்தது. மாணவர்கள் நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண AI-ஐப் பயன்படுத்துவது மற்றும் அரசுச் சேவைகளை எளிதில் பெறக்கூடிய ஒரே ஒருங்கிணைந்த AI தளத்தை உருவாக்குவது ஆகிய இரண்டு யோசனைகளைச் சுதர்சன் முன்வைத்துள்ளார்.
சென்னை விமான நிலையம் முதல் பூந்தமல்லி நிலையம் வரையிலான மெட்ரோ பயணத்தின் போது, பிரதமர் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் உரையாடுவதற்காக எஸ்பிஐ சென்னையால் (SPI Chennai) தேர்வு செய்யப்பட்ட 17 ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் சுதர்சனும் ஒருவர்.
ரயில் விமான நிலைய நிலையத்தை நெருங்கியபோது வரை அவர் அழைக்கப்படவில்லை. தனக்கான வாய்ப்பை நூலிழையில் தவறவிடும் சூழல் ஏற்பட்டதாக அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மீதமுள்ள தொழில்முனைவோர்களின் கருத்துக்களையும் கேட்கலாம் எனப் பிரதமர் மோடி கூறியதையடுத்து, சுதர்சனுக்குத் தனது திட்டங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுதர்சன், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் 'வின்சென் லேப்ஸ்' என்ற அப்ளைடு AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது லிங்க்ட்இன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, வின்சென் லேப்ஸைத் தொடங்குவதற்கு முன், இவர் கேபிஎம்ஜி இந்தியா (KPMG India) நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்; மேலும் 'ஃபேன்பிட்' (Fanpit) என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
இவர் 2018 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட காலத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பயின்றவர். மேலும் 2018 முதல் 2022 வரை இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ICAI) மூலம் சாட்டர்ட் அக்கவுண்டன்சி (CA) தகுதியையும் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியுடனான இவரது சமீபத்திய உரையாடல், கல்வி மற்றும் பொதுச் சேவை விநியோகத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.
சுதர்சனின் முதல் திட்டம், மாணவர்களை அரசுத் துறைகளுடனும் அவர்களின் நிஜ உலக சவால்களுடனும் இணைப்பதன் மூலம், நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் திறனைக் கல்விக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
பொதுவாக பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தியது இது. கல்வியை முடித்து கல்லூரியைக் கடந்தாலும் நிஜ உலகில் அதனை பயன்படுத்துவதற்கான அறிவு பெரும்பாலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுவது இல்லை. இது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.
சுதர்சன் முன்வைக்கும் அணுகுமுறையின் கீழ், அரசுத் துறைகள் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு உண்மையானப் பிரச்சினைகளின் அடிப்படையிலான திட்டங்களை (Projects) வழங்கலாம். வழக்கமான வகுப்பறை கற்றலுக்கு அப்பால், AI மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வுகளை உருவாக்க மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும்.
கல்வி நிறுவனப் படிப்பிற்கும், நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இந்த யோசனையின் நோக்கமாகும். இது பொது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மாணவர்கள் பணியாற்றுவதற்கும், தங்களின் திட்டங்கள் மற்றும் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் வாய்ப்பளிக்கும்.
இவரது இரண்டாவது திட்டம், ஒரு ஒருங்கிணைந்த AI சேவை மையம் மூலம் அரசுச் சேவைகளை அணுகுவதை எளிதாக்குவதில் கவனம் செலுத்தியது.
இந்த முன்மொழியப்பட்ட தளம், குடிமக்கள் வெவ்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளைத் தனித்தனியாக அணுகுவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் தங்களது கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் ஆவணங்களைப் பதிவேற்றவும் அனுமதிக்கும். ஒரு AI ஏஜென்ட் இந்த மனுக்களைக் கண்காணித்து, மேலதிக நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும்.
சம்பந்தப்பட்ட துறையைக் கண்டறிவதிலும், விண்ணப்பங்களைத் பின்தொடர்வதிலும் ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, குடிமக்கள் அரசுச் செயல்முறைகளை எளிதாக அணுகச் செய்வதை இந்த யோசனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ பயணத்தின் போது பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக எஸ்பிஐ சென்னையால் தேர்வு செய்யப்பட்ட 17 ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் சுதர்சனும் ஒருவர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் விமான நிலைய தளவாடங்கள் (Logistics), ராக்கெட்டுகளுக்கான பசுமை உந்துவிசை அமைப்புகள் (Green propulsion systems) மற்றும் சிப் வடிவமைப்பு (Chip design) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை.
இந்த அனுபவம் குறித்துப் பேசிய சுதர்சன், ரயில் விமான நிலைய நிலையத்தை அடைந்ததும் பேசுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்குச் சென்றதாகக் கூறினார். அப்போது பிரதமர் மோடி, மீதமுள்ள பங்கேற்பாளர்களுக்கும் தங்களது யோசனைகளை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.
அந்தச் சிறு கால இடைவெளியைப் பயன்படுத்தி சுதர்சன் தனது இரண்டு AI திட்டங்களை விவரித்தார். இந்த உரையாடலின் போது பிரதமரும் பிற முக்கிய அதிகாரிகளும் அதைக் கூர்ந்து கவனித்து கேள்விகளைக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.