கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த குடியகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பசுபதி கூலி தொழில் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த வருடம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை உடல் நல குறைவால் சில வாரங்களிலேயே உயிரிழந்தது. இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமடைந்த நாகம்மாள் பிரசவத்திற்காக கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட் டு இரண்டு தினங்களான நாகம்மாளுக்கு இன்று அதிகாலை மூன்று மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த அந்த குழந்தையின் உடலில் தோல் சம்பந்தமான நோய் இருந்ததாக மருத்துவர்கள் குழந்தையின் தந்தையான பசுபதியிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்து உயிரிழந்த நிலையில் இந்த குழந்தைக்கும் தோல் நோய் இருப்பதை அறிந்து மனம் உடைந்திருக்கிறார். எனவே விரக்தியடைந்து காணப்பட்ட பசுபதி காலை 10 மணியளவில் தனது தாய் மங்கம்மாவை அழைத்துக் கொண்டு நாகம்மாள் இருந்த வார்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் நாகம்மாள் இடம் “குழந்தையை மருத்துவர்கள் எதோ டெஸ்ட் செய்ய எடுத்து வர சொன்னார்கள்” என கூறி அங்கிருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு தனது தாய் மங்கம்மாளுடன், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் காவேரிப்பட்டினம் அருகே சென்றுள்ளார். அப்பொழுது காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றில் மங்கம்மாளிடம் குழந்தையை கொடுத்து ஆற்றில் உள்ள தண்ணீரில் போட்டுவிட்டு வரும்படி கூறியுள்ளார். அதன்படி பசுபதி ஆற்றங்கரையோரம் நின்று கொண்டிருக்க பசுபதியின் தாயான மங்கம்மாள் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றின் நடுவே சென்று ஆற்று தண்ணீரில் குழந்தையை அமுக்கி மூழ்க வைத்துள்ளார் .
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு மங்கம்மாளை நோக்கி சென்று குழந்தையை மேடு அவரிடம் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த பசுபதியையும் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து காவேரிப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார் ஆண் சிசுவை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண் சிசுவை கொலை செய்ய முயன்ற தந்தை பசுபதி மற்றும் பாட்டி மங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் காவேரிப்பட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.