

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் 80 வயதான மூதாட்டி ராக்கம்மாள். இவருக்கு கண்பார்வை இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்தார். வயதான நிலையில் தனியாக அவரது வேலைகளை செய்து கொள்ள சிரமம் ஏற்படும் என்பதில் பாதுகாப்பு காரணத்தினாலும் ராக்கம்மாள் அவரது தங்கையின் மகளான காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மகேஷ்வரி பராமரிப்பில் வசித்து வந்தார்.
தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்துவிட்டு அருகில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு வெளியே அயர்ந்து அக்கம் பக்கத்தினருடன் பேசுவது மற்றும் பகல் நேரத்தில் கோவில் வளாகத்தில் உறங்குவது என்பதை ராக்கம்மாள் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த (அக் 23) அன்று மாலை மூதாட்டி ராக்கம்மாள் காளியம்மன் கோவில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது திடீரென்று மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்த போது மூதாட்டியின் உடல் முழுவதும் பயங்கர தீ பற்றி எரிந்து சூழ்நிலையில் அலறி கதறிக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து மூதாட்டியை மீட்டனர். அப்போதே மூதாட்டிக்கு 50 சதவீதம் தீ காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரு கண்களும் தெரியாத 80 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து தீட்டு எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? எனவும் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்த மர்ம நபர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோழவந்தான் பகுதியில் மர்மமான முறையில் இரு கண்களும் பார்வையற்ற மூதாட்டி தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.