“எங்க பிள்ளையை எப்படியாவது கொண்டு வந்திடுங்க” - சவுதியில் சடலமான வாலிபர்.. ஆட்சியர் அலுவலகத்தில் கதறியழுத குடும்பத்தினர்!

இதனை வீரனுடன் தங்கியிருந்த நண்பர்கள் போன் செய்து குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்...
Mayiladuthurai Fisherman Death
Mayiladuthurai Fisherman Death
Published on: 
Updated on: 
1 min read

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சவூதி அரேபியாவில் வேலைக்குச் சென்ற மீனவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 32 வயதுடைய வீரன். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

எனேவே மீனவரான இவர், குடும்ப சூழ்நிலைக்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்து வந்த வீரன் தினமும் இரவு வீட்டிற்கு வீடியோ கால் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(அக் 03) இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிய வீரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனை வீரனுடன் தங்கியிருந்த நண்பர்கள் போன் செய்து குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், வீரனின் உடலை மீட்டு விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக வீரனின் குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். மேலும், வீரனின் மனைவி மாற்றுத்திறனாளி என்பதுடன், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதால், குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

வீரனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மனு அளித்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வீரனின் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து வீரனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டவர அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com