"எங்களை ஏமாத்தாதீங்க!" - விடாப்பிடியாக 5வது நாளாக போராடும் செவிலியர்கள்!

இரண்டு வருடத்தில் நிரந்தரம் செய்வார்கள் என்று நம்பித்தான் வந்தோம்..
"எங்களை ஏமாத்தாதீங்க!" - விடாப்பிடியாக 5வது நாளாக போராடும் செவிலியர்கள்!
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், எம்.ஆர்.பி (MRB) தேர்வு மூலம் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து 5-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயில் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகலாக இவர்கள் நடத்தி வரும் இந்தத் தொடர் போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB - Medical Recruitment Board) மூலம் முறையாகத் தேர்வு எழுதி, தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் இவர்கள். 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த இவர்களுக்கு, நியமன ஆணையில் 'இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சுமார் 9 முதல் 10 ஆண்டுகள் கடந்தும், இவர்கள் இன்னும் அதே தொகுப்பூதிய முறையிலேயே பணிபுரிய வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து, கண்களில் கருப்புத் துணி கட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு செவிலியர் பேசுகையில், "அரசுத் தேர்வாணையம் (TNPSC) போலத் தான் மருத்துவத் தேர்வாணையமும் (MRB) செயல்படுகிறது. எம்.ஆர்.பி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், பார்மசிஸ்டுகள் என அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. ஆனால், செவிலியர்களான எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி இழைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இரண்டு வருடத்தில் நிரந்தரம் செய்வார்கள் என்று நம்பித்தான் வந்தோம். ஆனால், 10 ஆண்டுகளாகியும் எங்களை இன்னும் தொகுப்பூதியத்திலேயே வைத்திருக்கிறார்கள்," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர், "காலிப் பணியிடங்கள் இல்லை" என்று கூறுவதை செவிலியர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். "மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள் வருகின்றன, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் செவிலியர் பணியிடங்கள் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. உதாரணமாக, கரூர் மாவட்டத்தில் செவிலியர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, திருச்சியிலிருந்து 20 செவிலியர்களைப் பணி மாறுதல் செய்கிறார்கள். அப்படியென்றால், திருச்சியில் பற்றாக்குறை ஏற்படாதா? இப்படி இருக்கும்போது காலிப் பணியிடங்கள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 முதல் 200 செவிலியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) பணிபுரிபவர்கள். அங்கு செவிலியர் பணியை மட்டுமின்றி, பார்மசிஸ்ட், லேப் டெக்னீஷியன் மற்றும் ஓ.பி சீட்டு போடுவது என அனைத்து வேலைகளையும் இவர்களே இழுத்துப் போட்டுச் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com