
அரியலூர் | கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் உற்சவர் சன்னதியில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள், கொடியுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடி மரத்தின் அருகே ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருள, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மாலை இரு வேலைகளிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா வரும் ஏழாம் தேதி காலை ஆறு மணி அளவில் நடைபெறுகிறது. இதில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
மேலும் வரும் எட்டாம் தேதி ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது திருவிழாவை முன்னிட்டு ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ் நாடு அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.