

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே துரைசாமியாபுரம் பிரதான சாலையில் தென்காசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், இராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கடந்த (நவ 24) ஆம் தேதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தீயனைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 20க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 7 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததுடன் 66 பேர் படுகாயம் அடைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் இருவரும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்த்ததுடன் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர் அரசு மருத்தவமனைக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வந்ததுடன் சிகிச்சை பெற்றவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டதாக அமைச்சர் தெரிவித்ததுடன் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீசார் தனியார் பேருந்தின் ஓட்டுநர்களான கலைச்செல்வன் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தனியார் பேருந்து ஒட்டுனரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த (கேஎஸ்ஸார்) என்ற தனியார் பேருந்து அதிவேகமாக வந்த போது துரைசாமிபுரம் காமராஜர் நகர் பகுதி சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென்றதால் நாய் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்கு அந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வலதுபுறம் திருப்பிய போது எதிரே தென்காசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.