தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள், காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பயிர்கள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர், விவசாயிகளிடம் வனவிலங்குகளுடன் பழகி கொள்ளுமாறு பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வனத்துறையினர் மீது நம்பிக்கை இழந்து ஆட்சியரிடம் முறையிட முடிவு செய்தனர்.
தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், நூதன முறையில் வனத்துறையின் பொறுப்பற்றத்தனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பழைய குற்றால அருவியில் அத்துமீறி குளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்ட விவசாயிகள் மீது வனத்துறையும், காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவைகளை கண்டிக்கும் விதமாக கூட்டத்தில் கைவிலங்கு போட்டபடி, மண்டியிட்டு வந்த மலையடிவார விவசாயிகள், ரேஷன் கார்டுகளில் தங்கள் குடும்ப பெயர்களோடு வன விலங்குகளையும் சேர்க்க வேண்டும் என குடும்ப அட்டைகளை வருவாய் துறை அதிகாரிகளிடம் அளித்து விட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்
இதனையடுத்து வேண்டுமென்றே ஆட்சியரும் வனத்துறை அலுவலரும் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், காவல்துறையினர் தங்கள் மீது போட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக தென்காசி செய்தியாளர் கணேஷ் குமாருடன் நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.