

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு வட்டம் அத்தி மஞ்சேரி பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ஆசிரியர் ராமு. இவரது மகன் மணி பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு பணிக்காக படித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே மணிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த பெற்றோர் திருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்ய ஆந்திர மாநிலம் நகரி அருகில் உள்ள சிந்தாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சந்தியா என்பவரை மணிக்கு திருமணம் செய்ய இரு வீட்டார் சம்பந்தத்துடன் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை இன்று ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் அவரது பெற்றோர் ஆகியோர்கள் நேற்று மணமகன் மணி வீட்டில் தங்கி உள்ளனர். நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் வரவேற்புக்கு தயாராக சந்தியா குளித்துவிட்டு வர கழிவறைக்கு சென்றிருக்கிறார். வெகுநேரமாகியும் சந்தியா வெளியில் வராத நிலையில் பதட்டமடைந்த பெற்றோர்கள் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது அவர் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தியா உயிரிழந்ததற்கான காரணம் என்ன? அவற்றின் விருப்பத்துடன் தான் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதா? சந்தியா யாரையாவது காதலித்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமண வரவேற்புக்கு மணமகன் வீட்டிற்கு வந்த மணப்பெண் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திருமண வீட்டார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மணமகள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? உடலில் ஏதேனும் மருத்துவ குறைபாடு காரணமாக உயிரிழந்தாரா? என உறுதி செய்ய முடியும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
