

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதுடைய அருணா. இவர் பொன்னேரி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த (டிச 29) ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அருணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அருணா வீட்டில் வேலை செய்யாததால் அவரது அம்மா திட்டியதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அருணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். தற்போது திடீர் திருப்பமாக அருணாவுடன் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலரான திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவை சேர்ந்த சிவபாரதி என்பவர் அருணாவை அவரது பெற்றோர் விஷம் ஊற்றி கொலை செய்து விட்டதாக ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மேலும் அருணாவும் சிவபாரதியும் கடந்த மூன்று வருடங்களாக பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது காதலுக்கு சிவபாரதி வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அருணா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடைகளை கைவிடுமாறு அருணாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அருணாவிற்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அருணா மறுப்பு தெரிவிக்கவே அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்கள் என சிவபாரதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கான ஆதரங்காளாக அருணா தனக்கு செய்த மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அருணா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.