
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதுடைய ராஜா. இவர் பல்வேறு கொலை வழக்குகள் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி என சொல்லப்படுகிறது. ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கொண்டாட்டத்தை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலும் “யாரா வேணாலும் இரு நம்ம லைனில் கரெக்டா இரு, திரையரங்கம் சிதறட்டும் இவன் பெயர் முழுக்க களைக்கட்டும் சிறுசுங்க எல்லாம் கதறட்டும் விசில் பறக்கட்டும் நரகத்துக்கே தெரியட்டும் அந்த எமனுக்குமே புரியட்டும் உலகத்துக்கே கேட்கட்டும்” என்ற நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்பட பாடலை பின்னணி இசையாக சேர்த்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இதனை தூத்துக்குடி நகர உதவி கண்காணிப்பாளர் மதன் பார்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நகர உதவி கண்காணிப்பாளர் மதன் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். எனவே முத்தையாபுரம் காவல்துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜா மற்றும் அவருடன் சேர்ந்த நபர்களை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது ராஜா வேறொரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது இதைத்தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜாவை முத்தையாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பிறந்தநாள் கொண்டாட வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வலியுறுத்திய போலீசார் ராஜா மற்றும் அவரது நண்பர்களை “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்ற திருக்குறளை அதன் பொருளுடன் வாசிக்க சொல்லி அதனை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடியில் யாரா வேணாலும் இரு நம்ம லைனில் கரெக்டா இரு என்று வீடியோ வெளியிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு காவல்துறையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் இதுபோன்று வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தும் ராஜா வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.