“மறந்து போன மனிதநேயம்.. தமிழ்நாட்டில் இப்படியா?” - துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்.. திரும்பிப் பார்க்காமல் சென்ற மனிதர்கள்!

கவனித்தபோதும் அவருக்கு உதவ முன்வராமல், திரும்பி கூட பார்க்காமல் கடந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது...
Vellore Kaniyambadi Asif Accident
Vellore Kaniyambadi Asif Accident
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம், காட்பாடி  அடுத்த கணியம்பாடி  பகுதியில் உள்ள இருதய மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிலால். இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவரது 18 வயது மகன் ஆசிப் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஆசிப் கடந்த (செப் 19) ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி-வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணியம்பாடி பாரதி நகர் பகுதியில் அதிவேகமாக வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி வாகனம் மெதுவாக சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல ஆசிப் முயன்றுள்ளார். அதே நேரத்தில் எதிரே மற்றொரு வாகனம் வருவதைக் கண்டு திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் வலதுபுறம் விழுந்துள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த கார், சாலையில் விழுந்து கிடந்த ஆசிப்பின் தலைமீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிப்பின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிப் சாலையில் விழுந்து உயிரிழக்கும் காட்சியும், அதன் பின்னர் அந்த வழியாக சென்ற சிலர் சம்பவத்தை கவனித்தபோதும் அவருக்கு உதவ முன்வராமல், திரும்பி கூட பார்க்காமல் கடந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. 

விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உதவி கிடைத்தால், சில நேரங்களில் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். அது போல பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தில்  விபத்தை நேரில் பார்த்தும் உதவ முன்வராமல் பலர் கடந்து சென்றது ‘இன்று எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம்மில் பலரிடம் மனிதநேயம் உயிரற்று போனதை காட்டுகிறது’ என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும்  விபத்து ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவிப்பதுடன், பாதுகாப்பான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகவும் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com