7 வயது சிறுமிக்கு நடந்தது தான் என்ன? - ஆறாவது நாளாக தொடரும் தேடுதல் பணி.. செஞ்சியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற உறவினர்களின் நடமாட்டம் குறித்தும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்...
Villupuram Child Missing Investigation
Villupuram Child Missing Investigation
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய இரவில் வீட்டில் பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், 6 நாட்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமியைத் தேடும் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிறுமியை கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியரின் இரண்டாவது மகள் 7 வயதுடைய சிறுமி ஹேமாவதி. இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த (அக் 11) ஆம் தேதி இரவு ஹேமாவதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பின்னர் பெற்றோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் (அக் 12) ஆம் தேதி அதிகாலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது காணாமல் போயிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியைப் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சிறுமி மாயமானது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரடியாக நடுப்பட்டு கிராமத்திற்குச் சென்று விசாரணையைத் துரிதப்படுத்தினார். சிறுமியைத் தேடும் பணிக்காக முதற்கட்டமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள மூன்று செல்போன் கோபுரங்களில் பதிவான சுமார் 600 அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Villupuram Child Missing Investigation
Villupuram Child Missing Investigation

இருப்பினும், சிறுமி மாயமானதற்கான காரணம் குறித்தோ, அவர் இருக்கும் இடம் குறித்தோ இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமியின் தாயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற உறவினர்களின் நடமாட்டம் குறித்தும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், நடுப்பட்டுக் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதா, சந்தேகத்திற்குரிய தடயங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கூறுகையில், சிறுமி மாயமான வீட்டின் வாசலில் இருந்த இரண்டு கதவுகளில் ஒன்று திறந்திருந்ததாகத் தெரிவித்தார். தவறான நோக்கத்துடன் செயல்படக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், செஞ்சி உட்கோட்டப் பகுதியில் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விழுப்புரம், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில், சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக செஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிறுமியைப் பற்றிய தகவல் அளித்து அவரைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் வடமேற்கு மாவட்டச் செயலாளர் குண. சரவணன் அறிவித்துள்ளார்.

Villupuram Child Missing Investigation
Villupuram Child Missing Investigation

மேலும் தற்போதைய தகவல் படி தஞ்சாவூரை சேர்ந்த சாமியார் சரவணன் என்பவர் 15 நாட்களாக அந்த சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் தங்கி இருந்த இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில், அவரின் செல்போன் நம்பரை வைத்து ட்ரேஸ் செய்து காவல் துறையினர் அவரை விழுப்புரம் மாவட்ட அரசூர் பகுதியில் பிடித்து தற்போது சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே சிறுமி மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com