“7 வருஷமா மாப்பிள்ளை பார்த்தும் செட் ஆகல” - திருமணம் பற்றி கேட்டு தொல்லை செய்த உறவினர்கள்.. மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு!

மீண்டும் ஏமாற்றத்துடன் மற்றொரு வரனுக்காக காத்திருப்பது போன்ற சம்பவத்தால் தீபிகா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது...
“7 வருஷமா மாப்பிள்ளை பார்த்தும் செட் ஆகல” - திருமணம் பற்றி கேட்டு தொல்லை செய்த உறவினர்கள்.. மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவருடன் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மகனுக்கும் திருமணமான நிலையில் பட்டப்படிப்பு படித்துவிட்டு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 28 வயதுடைய இளைய மகளான தீபிகாவிற்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக திருமணத்திற்கு வரன் பார்த்து வருவதாக சொல்லப்படும் நிலையில் தீபிகாவிற்கு எந்த வரணும் பொருந்தாமல் இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க வரும் போது அலங்காரம் செய்து கொண்டு அவர்கள் முன் நின்று மீண்டும் ஏமாற்றத்துடன் மற்றொரு வரனுக்காக காத்திருப்பது போன்ற சம்பவத்தால் தீபிகா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் “எப்போ உனக்கு கல்யாணம்” என கேட்டு தீபிகாவை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது.

Admin

இந்நிலையில் நேற்று தீபிகாவின் 29 வது பிறந்த நாள் என்பதால் காலையில் அவரது பெற்றோர்கள் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசிக்கொண்டிருந்த போது தீபிகா “இப்ப பிறந்தநாள் கொண்டாட்டம் தான் தேவையா 7 வருஷம் மாப்பிள்ளை பார்த்தும் செட் ஆகல” என வருத்தத்துடன் பேசி இருக்கிறார். எனவே பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கோவிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பெற்றோர் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த தீபிகா கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் நீண்ட நேரமாகியும் தீபிகா கழிவறையில் இருந்து வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது தீபிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com