
இன்றைய உலகில், உயர் கல்வி பயின்றவர்களுக்கு கூட வேலை தேடுவது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கு. இதற்கு ஒரு உதாரணமாக, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவர், சிங்கப்பூரில் உணவு டெலிவரி டிரைவராக பணியாற்றுறது உலக அளவில் விவாதத்தை கிளப்பியிருக்கு. 39 வயசு டிங் யுவான்ஜாவோ, பல உயர்ந்த பட்டங்களை வாங்கியும், தனக்கு ஏற்ற வேலை கிடைக்காம, இப்போ உணவு டெலிவரி பணியில் இருப்பது வேதனையே!.
டிங் யுவான்ஜாவோ, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தைச் சேர்ந்தவர். 2004-ல், சீனாவின் மிகக் கடினமான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான காவ்காவ் (Gaokao) தேர்வில் 750-க்கு 700 மதிப்பெண்கள் எடுத்து, சீனாவின் MIT-னு சொல்லப்படுற சிங்குவா பல்கலைக்கழகத்தில் இடம் பிடிச்சார். அங்கு கெமிஸ்ட்ரியில் இளங்கலை பட்டம் பெற்றவர், பின்னர் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் எனர்ஜி இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம், சிங்கப்பூரின் நான்யாங் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம், மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயோடைவர்சிட்டியில் முதுகலை பட்டம் வாங்கினார்.
இந்த பிரமிக்க வைக்குற கல்வி பயணத்துக்கு பிறகு, இவர் சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் (NUS) முனைவர் பட்ட ஆராய்ச்சியில் பணியாற்றினார். ஆனா, 2024 மார்ச்சில் இவரோட ஆராய்ச்சி ஒப்பந்தம் முடிஞ்சவுடன், இவருக்கு ஏற்ற வேலை கிடைக்கலை.
பல கம்பெனிகளுக்கு ரெஸ்யூம் அனுப்பி, 10-க்கும் மேற்பட்ட இன்டர்வியூக்களில் கலந்துக்கிட்டாலும், ஒரு வேலையும் கிடைக்கலை. இதனால, இவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி வேலையில் சேர்ந்தார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து, வாரத்துக்கு சுமார் 700 சிங்கப்பூர் டாலர்கள் (ஏறத்தாழ 47,000 இந்திய ரூபாய்) சம்பாதிக்கிறார். இப்போ இவர் சீனாவுக்கு திரும்பி, பீஜிங்கில் Meituan என்ற e-commerce தளத்துக்காக டெலிவரி வேலை செய்கிறார்.
சீனாவில், 16 முதல் 24 வயசு வரை உள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் மே 2025-ல் 14.9% ஆக இருந்ததாக சீனாவின் தேசிய புள்ளியியல் ஆணையம் தெரிவிக்குது. இது, உயர் கல்வி மற்றும் பல பட்டங்கள் இருந்தாலும், வேலை கிடைப்பது உத்தரவாதமில்லைன்னு உணர்த்துது. டிங் யுவான்ஜாவோவின் கதை, இந்தப் பிரச்சனையை உலக அளவில் எடுத்துக்காட்டுது. சிங்கப்பூர் மற்றும் சீனாவில் உள்ள வேலைவாய்ப்பு சந்தையில், குறிப்பாக அகாடமிக் மற்றும் ஆராய்ச்சி துறைகளில், போட்டி அதிகமா இருக்கு. இதனால, பலர் கிக் எகானமி (Gig Economy) வேலைகளை நோக்கி திரும்புறாங்க.
டிங், தன்னோட சமூக வலைதள பதிவில், “இது ஒரு ஸ்டேபிள் வேலை. இதனால குடும்பத்தை பராமரிக்க முடியுது. கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது, நல்ல வருமானம் கிடைக்குது. இது ஒரு கெட்ட வேலை இல்லை,”னு சொல்லியிருக்கார். இது மட்டுமில்லாம, “உணவு டெலிவரி செய்யும்போது உடற்பயிற்சியும் கிடைக்குது,”னு நகைச்சுவையா கூட குறிப்பிட்டிருக்கார். இந்த பாஸிட்டிவ் மனநிலை, இவரோட கதையை இன்ஸ்பயரிங்கா ஆக்கியிருக்கு. ஆனா, இவரோட நிலை, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையே உள்ள இடைவெளியை பற்றி ஒரு கேள்வியை எழுப்புது.
டிங்கின் கதை, சமூக வலைதளங்களில் பரவியவுடன், கல்வியின் மதிப்பு பற்றியும், வேலைவாய்ப்பு சந்தையில் உள்ள சவால்கள் பற்றியும் பல விவாதங்களை தூண்டியிருக்கு. சிலர், இது உயர் கல்வி மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குதுன்னு சொல்றாங்க, மற்றவங்க இவரோட நம்பிக்கையையும், எந்த வேலையையும் மரியாதையோடு செய்யுற மனநிலையையும் பாராட்டுறாங்க.
இந்த சம்பவம், இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துது. கல்வி முக்கியம், ஆனா அதைவிட வாழ்க்கையில் ஃபிளெக்ஸிபிளா இருக்குறது, நம்பிக்கையோடு முன்னேறுறது அதைவிட முக்கியம். டிங், தன்னோட சமூக வலைதள பதிவில், இந்த வருட காவ்காவ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, “தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலைன்னாலும் பயப்பட வேண்டாம், நம்பிக்கையை இழக்க வேண்டாம்,”னு ஆறுதல் சொல்லியிருக்கார். இது, இவரோட மனோபலத்தையும், மற்றவர்களை ஊக்கப்படுத்துற மனநிலையையும் காட்டுது.
ஆனால், இவர் இவ்வளவு படித்தும் நல்ல வேலை கிடைக்காமல் இருப்பது யாருடைய தவறு? பதிலை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறோம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.