பிரபல சமையல் கலைஞர் 'செஃப்' தாமு.. 72 வயதில் காலமானார்! கோடிக்கணக்கான இதயங்களில் 'அப்பாவாக'.. நீங்கா இடம்பிடித்தவர் விடைபெற்றார்

எதார்த்தமான, நகைச்சுவை கலந்த பேச்சு, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரை "அப்பா.. அப்பா" என்று உரிமையாக அழைக்கும் நிலைக்கு வீட்டில் ஒரு உறுப்பினராகவே மாறினார்.
Chef Damu dies at 72
Chef Damu dies at 72
Published on: 
Updated on: 
2 min read

பிரபல சமையல் கலைஞர் 'செஃப்' தாமு என்ற முனைவர் கே. தாமோதரன் (72) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிராளமானவர்தான் கே. தாமோதரன். இவர் 'செஃப்' தாமு என்ற பெயரால் தமிழக மக்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ளார். இவரது, எதிர்த்தமான, நகைச்சுவையான பேச்சு, குழந்தைமனம், மக்களிடையே சமையலை இன்னும் ரசிக்கும்படியாக இலகுவாக்கிய திறன் போன்றவற்றால் இவர் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாக இவர் அனைவரது வீட்டிற்குள்ளும் முதல்முதலில் வந்தார். பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக சமையலை இலகுவாக்கி கற்றுத்தர தொடங்கினார்.

பின்னர் 'குக் வித் கோமாளி' என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக வேறொரு பரிணாமத்தில் 'செஃப்' தாமு, 'தாமு அப்பாவாக' தோன்றினார். அதாவது, எதார்த்தமான, நகைச்சுவை கலந்த பேச்சு, குழந்தை மனம் போன்றவற்றால் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரை "அப்பா.. அப்பா" என்று உரிமையாக அழைக்கும் நிலைக்கு வீட்டில் ஒரு உறுப்பினராகவே மாறினார்.

1954-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த தாமோதரன், சமையல் மீது கொண்ட பேரார்வம் கொண்டவர். மேலும் அவர், தனது தொழில்முறை நிபுணத்துவத்தை பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் இணைத்தார். அவர் 2004-ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர், 2010-ம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். இது சமையல் துறையில் அவருக்கு ஒரு தனித்துவமான ஒரு இடத்தை பெற்றுத்தந்தது. மேலும், சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக 'பத்மஸ்ரீ விருது' இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இவர் சமையல் கலையில் 'முனைவர் பட்டம்' பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

சமையலை கடமைக்கென்று செய்தவர்களைக்கூட கலைநயத்தோடு செய்ய கற்றுக்கொடுத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பாரம்பரிய தமிழ் உணவு வகைகளை அறிமுகப்படுத்தியதுடன், தமிழ் உணவுகளின் சிறப்பை உலகளவில் கொண்டு சேர்க்கவும் அவர் பாடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பு செய்தி தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com