

சிலம்பரசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அரசன் திரைப்படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும், படம் வெளியாகத் தாமதமாவதாகவும் ரசிகர்கள் சலித்துக்கொண்டனர். ஏனென்றால், வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்தனர். ஆனால், வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல் என வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில், வட சென்னை படத்தின் உலகத்திலிருந்தே அரசன் திரைப்படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இந்தப் படத்தின் அப்டேட்களும் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தீபாவளியை ஒட்டி 'World of Arasan' என்ற புரோமோ வீடியோவை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கல்யாண வேலைகளில் பிஸியாக இருப்பதால், அதற்கான பின்னணி இசைப் பணிகளை அவரால் முடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தியா டுடே வலைத்தளம் கூறுவதன்படி, மாற்றுத் திட்டங்களைத் தயாரிப்பாளர் முன்வைத்தாலும், அனிருத்தின் ஒரிஜினல் இசை இல்லாமல் புரோமோவை வெளியிடப் படக்குழு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால், தீபாவளிக்கு எளிமையான ஒரு புரோமோவை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இணையம் முழுவதும் ட்ரோல்களால் நிரம்பியது.
'FIRE GLIMPSE' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அடையாறு கானா ஹரி பாடியுள்ளார். அடையாறு டோலாக் பிரதி டோலாக் வாசித்துள்ளார். கிருஷ்ணா என்பவர் இசையமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சிம்பு நடந்து வரும் காட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
ரசிகர்கள் 'இது ஒரிஜினல் இல்லை என சொல்லுங்கள்' என்றும் 'இதை டெலிட் பண்ணுங்க' என்றும் 'அனிருத் கல்யாண வேளையில் இருப்பதால் மியூசிக் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார் போல' enrum கமண்ட் செய்து வருகின்றனர்.
விரைவில் 'World of Arasan' புரோமோ வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அனேகமாக டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புரோமோ வெளியீடு தேதியே தெளிவாக கூறப்படவில்லை எனும்போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என கேள்வி எழுப்பாமல் இருப்பதே நலம்.
அரசன் படத்தின் போஸ்டரில், வட சென்னை படத்தின் பாணியில் இருந்த எழுத்துகள் புதிய வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளன. மேலும், கோல்ட்மைன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
படப்பிடிப்புகள் பெருமளவில் முடிந்துவிட்டதாகவும், பிரம்மாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டும் என்றும் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹீன் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்