'சண்டியர்' பெயரால் சாதிய சர்ச்சை.. "கடந்த காலத்தை விட மோசமான விளைவுகள் வரும்.." - கமலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

சண்டியர் என்ற தலைப்புடன் ரத்தம் படிந்த ஒரு கார் அருகே இருப்பது போலவும் துப்பாக்கிகளை வைத்திருப்பது போலவும் போஸ் கொடுக்கிறார் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன்.
Sandiyar Movie Poster
'சண்டியர்' பெயரால் சாதிய சர்ச்சை.. "கடந்த காலத்தை விட மோசமான விளைவுகள் வரும்.." - கமலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
Published on: 
Updated on: 
2 min read

எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு சண்டியர் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த பெயருக்கு பலரும் எதிர்ப்புகளைக் கிளப்பவே சர்ச்சை எழுந்துள்ளது.

கமல்ஹாசன் முன்னதாக விருமாண்டி திரைப்படத்துக்கு, சண்டியர் என்ற பெயரையே தீர்மானித்திருந்தார். ஆனால் அப்போது எழுந்த எதிர்ப்புகள் காரணாமக அந்த பெயரை வைக்க முடியவில்லை.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்திருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு பதிவில், "பழிவாங்குதல் இரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்." என வன்முறையை மெச்சும் வகையில் வாசகம் இருந்தது ஏற்கெனவே விமர்சிக்கப்பட்டது.

சண்டியர் - விருமாண்டி பெயர் மாற்ற என்ன காரணம்?

கமல்ஹாசன் 1992ம் ஆண்டு 'தேவர் மகன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல கருத்துக்களை பேசினாலும் படம் முழுவதும் காட்டப்பட்ட சாதிப் பெருமிதம் தென் தமிழகத்தில் சாதிய உணர்வைத் தூண்டியது. குறிப்பாக அதில் இடம் பெற்ற போற்றி பாரடி பெண்ணே பாடல் இன்றளவும் குறிப்பிட்ட சமூகத்தினர் சாதியை உயர்த்திப் பிடிக்க பயன்பட்டு வருகிறது. இதன் பக்கவிளைவாக தென் தமிழகத்தில் மோதல்கள் எழுந்தன.

தேவர் மகன் திரைப்படம் அதன் கச்சிதமான திரைக்கதை வடிவத்துக்காக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படம் தனக்கு மன உளைச்சலைக் கொடுத்ததாகப் பேசியிருக்கிறார்.

இந்த படம் கொடுத்த தாக்கம் தென் தமிழகத்தில் பாதிக்கபட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், திரைப்படங்களில் பேசப்படும் சாதிய பெருமிதம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். அவை தங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்துவதை உணர்ந்தனர்.

இந்த விழிப்புணர்ச்சிதான் கமல் சண்டியர் எனத் தனது படத்துக்கு பெயர்வைத்த போது எதிர்ப்புகள் எழக் காரணமாக இருந்தது. தேவர்மகன் - சண்டியர் படங்களுக்கு இடையே தென் தமிழகம் நாட்டையே உலுக்கிய சாதிய வன்முறை சம்பவங்களைக் கடந்து வந்திருந்தது. எனவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசும் பல்வேறு அமைப்புகள் சண்டியர் என்ற தலைப்பை கடுமையாக எதிர்த்தன.

கமல் அந்த காலத்தில் விரக்தியில், கேலி செய்யும் தொனியில் கொடுத்த நேர்காணல் இப்போதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மீண்டும் தனது வன்முறைத் திரைப்படத்துக்கு சண்டியர் எனப் பெயர் வைத்துள்ளார் கமல்.

தமிழகத்தில் சாதிய பெருமிதமோ, வன்முறை கலாச்சாரமோ சற்றும் குறையவில்லை என்பதை தினம் தினம் செய்திகளில் பார்த்து வருகிறோம். சிறார்கள் பலரும் அருவாள், கத்தியுடன் ரீலஸ் பதிவிடுவதும், 16 - 23 வயது இளைஞர்கள் கொலை குற்றங்களில் ஈடுபடுவதும் சாதாரணமாகி வருகிறது.

இந்த சூழலில் "சண்டியர் என்பது எங்கள் சாதியின் பெருமையை கூறும் தலைப்பு கமல்ஹாசன் இந்த தலைப்பை வைத்திருக்க வேண்டும்" என இப்போதே சாதி ஆதரவு குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, "கமல்ஹாசன் சுயநினைவுடன் இந்த படத்தை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. யாரோ அவரை பின்னால் இருந்து இயக்குகின்றனர்... இப்போது இந்த படம் வந்தால் கடந்த காலத்தை விட இதன் விளைவுகள் மிக மோசமாகிவிடும்.

கடந்த 30 ஆண்டுகளில் தான் தென் தமிழகத்தில் அமைதி நிலவி கொஞ்சம் தொழில்கள் வளரத் தொடங்கிவியுள்ளன. இப்போது இது போல வன்முறையைத் தூண்டும் படங்களை தமிழ்நாட்டை மீண்டும் கலவரங்களை நோக்கி தள்ளுவதாகதான் அமையும்.

எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே இதை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். படத்தின் கதை என்னவாக இருக்கிறது என்பது தேவையில்லை. தலைப்பே பிரச்சனைதான்." எனக் கூறியுள்ளார்.

இரத்தம் தெறிக்கும் போஸ்டர்கள்.. லெனின் பாரதி எதிர்ப்பு

சண்டியர் என்ற தலைப்புடன் ரத்தம் படிந்த ஒரு கார் அருகே இருப்பது போலவும் துப்பாக்கிகளை வைத்திருப்பது போலவும் போஸ் கொடுக்கிறார் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன். இந்த வன்முறைக்கு எதிராக இயக்குநர் லெனின் பாரதி கருத்து தெரிவித்திருந்தார்.

"ஏற்கனவே தென்மாவட்டங்களில் சாதிய மோதல்கள், சாதிவெறிப் படுகொலைகள், சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் சூழலில் சாதிவெறியையும், போக்கிரித்தனத்தையும் தூண்டும் சண்டியர் எனும் பெயரில் படம் எடுப்பது மூத்த கலைஞராய் கொஞ்சமும் சமூகப் பொறுப்பற்ற செயல்." எனக் கூறியிருந்தார்.

மேலும் இன்று, "சமூக நல்லிணக்கத்தையும் வன்முறையற்ற சமூகத்தையும் விரும்பும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்கங்கள் மற்றும் பொதுசமூகம் கமல்ஹாசன் வைத்திருக்கும் #சண்டியர் எனும் ஆதிக்கவெறிப் பெயரை நீக்கும்வரை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது காலத்தின் அவசியம்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

Sandiyar Movie Poster
வரலாறு படைக்கும் விஜய் சேதுபதி.. ஹாலிவுட் நிகழ்ச்சியில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர்! எம்மி அப்டேட்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்