“அனிருத் – காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தீவிரம்” - ரேவந் ரெட்டியை சந்தித்த கலாநிதி மாறன் தம்பதி.. வெளியாகுமா அதிகாரபூர்வ தகவல்?

வெளிநாட்டில் திருமணத்தை நடத்தி விட்டு, சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய..
kavya maran and anirudh
kavya maran and anirudh
Published on: 
Updated on: 
2 min read

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்துக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் இரு குடும்பத்தினரிடமும் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், திருமண வரவேற்புக்கான அழைப்பிதழைத் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தனது தனித்துவமான இசையால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, தென்னிந்தியத் திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளராக உயர்ந்து ரசிகர்களிடையே “ராக் ஸ்டார்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. படத்தின் முக்கியக் காட்சிகளுக்கு அவர் வழங்கிய பின்னணி இசை திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாகியதாக கூறப்படுகிறது.

kalanithi maran meets telangana chief minister revanth reddy
kalanithi maran meets telangana chief minister revanth reddy

ஏற்கனவே அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இது குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்ததது. இந்நிலையில், அனிருத் – காவ்யா திருமணம் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் திருமணத்தை நடத்தி விட்டு, சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்திற்குச் சென்று, திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

இது குறித்து தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. அனிருத் – காவ்யா திருமணம் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும், திருமணத் தேதி மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com