

நடிகர் தினேஷ், தொகுப்பாளினி எழிலரசியை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ‘ஆட்டக்கத்தி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். முதல் படத்திலேயே அவரது யதார்த்தமான நடிப்பினால் பாராட்டுப் பெற்றார். அதுவே அவரது அடையாளமாக ஆனது. அடுத்ததாக ‘குக்கூ’ படத்தில் பார்வையற்றவர் பாத்திரத்தில் நடித்து, எல்லோராலும் அறியப்படும் நாயகனானார்.
‘விசாரணை’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ஜே பேபி’, ‘தண்டகாரண்யம்’ போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்படும் படங்களில் கதை நாயகனாக கலக்கி வருகிறார். அதுபோலவே, ‘லப்பர் பந்து’ போன்ற கமர்ஷியல் வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
பா. ரஞ்சித் படத்தில் முதல்முறையாக ஹீரோவான இவர், இன்றுவரை அவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் நடித்து வருகிறார். அப்படியாக, அடுத்ததாக ‘வேட்டுவம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொகுப்பாளினி எழிலரசி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், "Happy birthday to my man" என எழுதியுள்ளார். தினேஷ் உடனான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் மோதிரம் அணிந்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளதால் திருமணம் நிச்சயம் ஆனதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், "உனக்கு எப்போதும் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் வரும் அத்தனை ஏற்ற இறக்கங்களிலும், ஒவ்வொரு முறையும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன்" என்றும் காதலைப் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், "பெண்களே, பாதுகாப்பான தூரத்தில் இருந்தே ரசித்துக் கொள்ளுங்கள்" என்ற எச்சரிக்கையையும் க்யூட்டாக சொல்லியிருக்கிறார்.
தினேஷ் மற்றும் எழிலரசி கடந்த சில ஆண்டுகளாக காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ‘லப்பர் பந்து’ பட வெற்றிக் கொண்டாட்டத்தில் தினேஷுடன் காணப்பட்டார் எழிலரசி. கடந்த ஆண்டு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ், "அடுத்த கல்யாணம் நமக்குத்தான்" என எழிலரசியைப் பார்த்தபடி பேசியது வைரலானது.
தொகுப்பாளினி எழிலரசி, ‘தண்டகாரண்யம்’ பட விழாவைத் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னணி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பக்கங்களில் பணியாற்றியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்