"ஒரு திருமண வாழ்க்கைக்காக ஏங்கினார்.. " - சில்க் ஸ்மிதா ரகசியங்களை போட்டுடைத்த குஷ்பு!

"அவருடைய காதலனின் பிள்ளைகளுக்கு கிட்டத்தட்ட அவர் வயது. நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோது, ​​அவர் அந்த பிள்ளைகளுக்காகப் பைத்தியம் பிடித்தது போல் பொருட்களை வாங்குவார்." - குஷ்பு
Khushbu Sundar
 and Silk Smitha
"ஒரு திருமண வாழ்க்கைக்காக ஏங்கினார்.. " - சில்க் ஸ்மிதா ரகசியங்களை போட்டுடைத்த குஷ்பு!
Published on: 
Updated on: 
2 min read

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை நினைவுகூறிப் பேசியுள்ளார்.

சில்க் ஸ்மிதா இறந்து கடந்த செப்டம்பர் 23ம் தேதியுடன் 30வது ஆண்டு. ஆனால் இன்றும் தமிழ் சினிமாவில் நினைவுகூறப்படும் நடிகையாக உள்ளார்.

"தன் கண்களையும் உடலையும் எவ்வாறு சிறப்பான முறையில் வெளிப்படுத்துவது என்பது சில்க்கிற்குத் தெரிந்திருந்தது. அதே சமயம், அவர் எப்போதும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருந்தார். நான் அவரை ஒருபோதும் சில்க் என்றோ ஸ்மிதா என்றோ அழைத்ததில்லை. அவரது இயற்பெயரான விஜயலட்சுமியின் சுருக்கமான 'விஜி' என்றுதான் அழைப்பேன். நான் அப்படி கூப்பிடும்போதெல்லாம் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்," என்று மேடையில் குஷ்பு பேசியுள்ளார்.

மேலும் 1984ல் அர்ஜூன் உடனான படப்பிடிப்பில் (அப்போது குஷ்புவுக்கு சுமார் 14 வயது) முதல் முறையாக விஜயலட்சுமியைப் பார்த்த தருணம் பற்றி நினைவுகூர்ந்த அவர், "திடீரென்று படப்பிடிப்பு தளத்தில் ஒரு அமைதி நிலவியது. ஒரு துண்டு போடப்பட்ட மடிப்பு நாற்காலியும் ஒரு மேஜையும் வைக்கப்பட்டன.

கவர்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த ஒரு தோற்றத்துடன் எதிரில் வந்து நின்றார் சில்க். நான் அதிலே மயங்கிவிட்டேன்.

எனக்கு தமிழ் அந்நிய மொழி. அவர் கொஞ்சம் தடுமாற்றத்துடன் தான் ஆங்கிலம் பேசுவார். ஆனால் என்னை உடனடியாக சௌகரியமாக உணரவைத்தார். அப்போது அவருக்கு 22 அல்லது 23 வயதுதான் இருக்கும். என்னவொரு நட்சத்திரம் அவர்!" எனப் பேசினார்.

மேலும் அவர்களது நட்பு பற்றி, "அந்த படம் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் தொழில்முறை நண்பர்களானோம். என்னை ஒருமுறை கூட அவர் தாழ்வாகவோ சிறுமையாகவோ உணர வைத்தது இல்லை.

ஆம், அவர் ஒதுங்கியே இருப்பார், மேலும் பலர் அவரை அகங்காரம் பிடித்தவர் என்று நினைத்தார்கள். அது அவருடைய தற்காப்பு உத்தி என்றும், தன் மனநலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் எல்லைகளை கடைபிடிக்கவும் அவர் கையாண்ட ஒரு வழி என்றும் நான் நினைக்கிறேன்.

ஐட்டம் டான்ஸ் ஆடி, குறைவான ஆடைகளை அணியும் பெண்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே? அதை அவர்கள் இழிவாக 'மென்மையான நிர்வாணம்' (soft porn) என்று அழைக்கிறார்கள். இன்றைய நடிகர்கள் அதைவிட மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிகிறார்கள்." எனப் பேசினார்.

சில்க் ஸ்மிதாவின் நடவடிக்கைகள் பற்றி, "அவர் ஒரு உண்மையான நட்சத்திரப் பெண்மணி. தனது ஆடைகள் அனைத்தையும் தானே வடிவமைப்பார், ஆடை வடிவமைப்பாளரைச் சார்ந்திருக்க மாட்டார். போலியான ஆபரணங்களை வாங்குவதற்குப் பதிலாக, தனது நகைகளைத் தானே வரைந்து செய்ய வைத்து அணிந்துகொள்வார்." எனப் பேசினார்.

மேலும் அவரது சோகமான தனிப்பட்ட வாழ்க்கை பற்றி, "அவர் ஒரு குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கினார். அவர் இருந்த உறவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டார்.

அவருடைய காதலனின் பிள்ளைகளுக்கு கிட்டத்தட்ட அவர் வயது. நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோது, ​​அவர் அந்த பிள்ளைகளுக்காகப் பைத்தியம் பிடித்தது போல் பொருட்களை வாங்குவார்.

திரைக்குப் பின்னால் எல்லாம் சாதாரணமாக இருக்க வேண்டும் என்றும், ஒரு சாதாரண மனைவியைப் போல வாழ வேண்டும் என்றும் விரும்பினார். அது ஒருபோதும் கிடைக்கவில்லை." என்றார் குஷ்பு.

மேலும் அவரது கடைசி காலம் குறித்து பேசுகையில், "நாங்கள் இருவரும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தோம், ஒன்றாக இருக்கும் நேரங்களில் அதைப் பற்றி விவாதிப்போம்.

ஏன் உங்களை இவ்வளவு கட்டுப்படுத்த அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவரிடம் எந்த பதிலும் இல்லை. காதலுக்கு கண்ணில்லை என்று நினைக்கிறேன்.

அவருக்கும் மிகக் கடினமான கடந்த காலம் இருந்தது, அதனால் அவர் தன்னிடம் இருந்ததை ஒரு ஆதரவு தேவைப்படும் குழந்தையைப் போல பற்றிக்கொண்டிருந்தார்.

கட்டுப்பாடு தாங்க முடியாததாக மாறியபோதுதான், மோதல் எழுந்தது என்று நான் நினைக்கிறேன். எல்லாம் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வரை, அவள் கொடுத்துக்கொண்டே இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.…

ஒரு அர்ஜூன் படத்தின் படபிடிப்புக்காக ஊட்டியில் இருந்தபோதுதான் அவர் இறந்த செய்தி வந்தது. நான் மனமுடைந்து அழுதேன். அவர் மறைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டதா.. நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது...

அவர் தனித்துவமானவர். அவரைப் போல ஒரு நபரை நான் இதுவரை பார்க்கவில்லை." என உருக்கமாகப் பேசினார் குஷ்பு.

Khushbu Sundar
 and Silk Smitha
தனுஷ் - வடிவேலு பிரச்சனை தீர்ந்துவிட்டதா? சிவகங்கையில் ரசிகர்களுக்கு ஷாக் - 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com