

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட் தற்போது ஒரு பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். வர்ஷினி சினிமா மற்றும் வெப் சீரிஸ் வாயிலாக ரசிகர்களிடம் அறிமுகமான இவர், தொடர்ந்து நடிப்புத் துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். வர்ஷினி வெங்கட், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மற்றும் ‘சொட்ட சொட்ட நனையுது’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர, சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு பிரபலம் ஆவார். பிக் பாஸுக்கு பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், புகைப்படங்கள் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் தனது இருப்பை காண்பித்துவந்தார். பின்னர் தேர்தல் நேரங்களில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, சமூகவலைதளங்களில் பரப்புரை செய்து வந்தார். தவெக சார்பாக யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு ஆதரவாக பேசி வந்துள்ளார். “எனது உழைப்பை பார்த்து ஒரு நாள் கட்சியிலிருந்து என்னை அழைத்து பேசுவார்கள்” என்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது மற்றும் பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பேச்சுக்கள் குறித்து தவெக நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தவெக இணையவாசிகளிடையே கவனம் பெற்றார்.
தற்போது வர்ஷினி வெங்கட் காவல் நிலைய புகார் மற்றும் கைது காரணமாக மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, வர்ஷினிக்கு நண்பராக அறிமுகமான ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரிடம் குறும்படம் எடுக்கலாம் எனக் கூறி சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து குறும்படம் எடுக்கவில்லை என்றும், அந்த இளைஞர் படப்பிடிப்பு முயற்சியில் பங்கேற்றதற்கான தகவலோ இதுவரை வெளியாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் இளைஞர் தான் கொடுத்த பணம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். சரியான பதில் கிடைக்காததால், பணத்தை திருப்பித் தருமாறு வர்ஷினியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தாமதப்படுத்தியதுடன், மேலும் பணம் கேட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இளைஞரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்த வர்ஷினி, சிலருடன் சேர்ந்து அவரை தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை பறிக்கப்பட்டதாகவும் அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட்டை தற்போது கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வர்ஷினி தமிழக வெற்றி கழகத்தில் செயல்பட்டு வந்ததும், அவரின் நேர்காணல்களும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன. இணையவாசிகள் தொடர்ந்து அவரின் பதிவுகளில் கைது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்