

தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 10-வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். இந்த சீசனில் கூடுதலாக சாமானியர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ‘பிக்பாஸ் காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நபர், பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே ஒவ்வொரு சீசனிலும் பெரும் பேசுபொருளாக இருப்பதால், இதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருந்து வருகிறது. ஆனால், நாட்டிலேயே அதிக அளவில் சர்ச்சைக்குள்ளாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் பிக்பாஸ் இருந்து வருகிறது.
பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கிய அன்றே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தனியார் நிகழ்ச்சி அரங்கிற்கு சென்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே, இவர்களுக்கும் பல்வேறு டாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் போட்டிகள், வெறும் விளையாட்டு என்ற எல்லையைக் கடந்து, போட்டியாளர்களின் பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். பல நேரங்களில் வித்தியாசமான டாஸ்க்குகள் பார்வையாளர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளன.
ஆனால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு டாஸ்க், பலரையும் முகம் சுழிக்க வைத்ததுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் ‘சேர் பிடிக்கும்’ போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண மியூசிக்கல் சேர் போல இல்லாமல் கும்பலாக போட்டியாளர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதில் இருக்கையைப் பிடிப்பதற்காக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளை புரோமோவில் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், “ஒரு சேருக்காக போட்டியாளர்களை இவ்வளவு சண்டையிட வைப்பதா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கெனவே, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய பொதுமக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே அழைத்து ‘காமன் மேன்’ என்ற பெயரில் போட்டி நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மற்றொரு போட்டியாளரான பிரியா வர்ஷினி என்பவர் தன்னை போட்டியின் நடுவர்கள் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாஸ்க்கும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளிலேயே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்