உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா மூலம் உலக புகழ் பெற்றவர் மோனலிசா. மத்திய பிரதேசம் பகுதியை சேர்ந்த நாடோடிகள் குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்துடன் பாசி மாலைகள் மற்றும் மணிகள் விற்று வந்த நிலையில் அவரது வசீகர கண்களாலும், எளிமையான அழகினாலும் ஒரே இரவில் இணைய வாசிகள் மத்தியில் வைரல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த நிலையில் பாலிவுட் திரைப்பட இயக்குனர் மனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து மோனாலிசாவை வைத்து 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வலுக்கட்டாயமாக தனக்கு பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரளித்தார். எனவே இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இளம் பெண்ணின் குற்றச்சாட்டு அடிப்படையில் மனோஜ் மிஸ்ராவை கைது செய்தனர். இதன் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.
பின்னர் மோனலிசா நடித்த ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது காதலனான நடிகர் பார்மன் கானை பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கேரளாவில் திருமணம் செய்து கொண்ட நிலையில் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மோனலிசா தனது முதல் படத்தின் படப்பிடிப்பு நேபாளம், டேராடூன் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா தன்னிடம் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
மேலும் “முதல் படம் என்றால் இப்படித்தான் நடந்து கொள்வார? எனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை எனது பெற்றோர்களிடம் தெரிவித்த போது அவர்களும் இதை கண்டுகொள்ளவில்லை பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இருந்தார்கள்” என கூறி மனம் உடைந்து அழுதார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் பலரும் மனோஜ் மிஸ்ராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.