கும்பமேளா அழகி ‘மோனாலிசா’ காதல் திருமணம்.. "இதுதான் கேரளாவின் நிஜ ‘கேரளா ஸ்டோரி’ - குவிந்த அரசியல் தலைவர்கள்!

கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருமானூர் நயினார் கோவிலில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது...
கும்பமேளா அழகி ‘மோனாலிசா’ காதல் திருமணம்.. "இதுதான் கேரளாவின் நிஜ ‘கேரளா ஸ்டோரி’ - குவிந்த அரசியல் தலைவர்கள்!
Published on
Updated on
2 min read

கும்பமேளா திருவிழாவில், மாலைகள் மற்றும் ருத்ராட்ச மணிகளை விற்றுக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. அந்தப் பெண்ணின் வசீகரமான கண்களும், முக அழகும் பலரையும் ஈர்க்க, இணையவாசிகள் அவருக்கு 'மோனாலிசா' என்று செல்லப் பெயர் சூட்டினர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனி போஸ்லே என்ற அந்தப் பெண், ஒரே இரவில் நாடு முழுவதும் அறியப்படும் ஒரு பிரபலாமானார். இதற்கிடையில், அவருக்கு மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, படப்பிடிப்பிற்காக அவர் கேரளாவுக்கு வந்திருந்தார்.

மோனாலிசாவுக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடிகரும் மாடலுமான ஃபர்மான் கான் என்பவருக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பின் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்களது காதல் வெவ்வேறு மதம் என்பதால் மோனாலிசாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது தந்தை ஜெய் சிங் போஸ்லே, தனது மகளுக்குச் சொந்த ஊரிலேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

தந்தையின் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்த மோனாலிசா, கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது தனது காதலருடன் சேர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள தம்பனூர் காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்தார். "எனது தந்தை என்னை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார், நான் எனது விருப்பப்படி ஃபர்மான் கானுடன் வாழ விரும்புகிறேன்" என்று காவல்துறையினரிடம் அவர் முறையிட்டார். மோனாலிசா 18 வயது பூர்த்தியானவர் என்பதால், சட்டப்படி அவர் தனது விருப்பமானவருடன் செல்லலாம் எனப் போலீஸார் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருமானூர் நயினார் கோவிலில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதுதான் இப்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. கேரளக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். கேரளா எப்போதும் காதலுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்பதை இந்தத் திருமணம் உலகிற்குச் சொல்லியிருப்பதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

குறிப்பாக, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி" (The Real Kerala Story) என்று இந்தத் திருமணத்தைப் புகழ்ந்து பேசியுள்ளனர். கேரளாவில் மக்கள் எந்தப் பயமும் இன்றி, தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று அவர்கள் கூறினர். மணமகன் ஃபர்மான் கான் கேரளா பாணி வேட்டி சட்டையிலும், மோனாலிசா சிவப்பு நிறப் பட்டுச் சேலையிலும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.

இருப்பினும், இந்தத் திருமணம் ஒருபுறம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. மோனாலிசாவுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்றும், அவர் ஒரு மைனர் என்றும் சில அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அவர் மைனராக இருக்கும் பட்சத்தில், இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் மோனாலிசா வயது வந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தத் தம்பதியினர் கேரளாவிலேயே தங்கித் தங்களது கலைப் பயணத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளனர். "நாங்கள் கேரளாவை நேசிக்கிறோம், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், எங்களைப் போன்ற காதலர்களுக்கு இது ஒரு சொர்க்கம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com