

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்களின் மனதினை கவர்ந்த அஸ்வின் குமாருக்கு இன்று கோவையில் பிரம்மாண்டமாக திருமணம் முடிந்திருக்கிறது. தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது மனைவி மறைந்த பிரபல இயக்குநரின் பேத்தி என்றும் கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் அஸ்வின் குமார். மேலும் இவர் அதே தனியார் தொலைக்காட்சியில் சில தொடர்களையும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையின் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்றார். இதனை தொடர்ந்து அஸ்வின் சில 'ஆல்பம்' பாடல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, அடிபொளி, குட்டி பட்டாஸ், யாத்தி யாத்தி போன்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக அஸ்வின் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வந்தார் என்றுதான் கூறவேண்டும்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு இன்ஜினீயரிங் முடித்து விட்டு கோவையில் இருந்து சென்னை வந்தவர்தான் அஸ்வின். இவரது முயற்சியால். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதன்பின்னர் சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தினை உருவாக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, அஸ்வின் kaகதாநாயகனாக நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்த திரைப்படத்தில் இசைவெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது சர்ச்சையாக மாறியது. இதனையடுத்து, தனது பேச்சிற்காக மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் வெளியான 'என்ன சொல்ல போகிறாய்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் அவர் 'செம்பி' என்ற திரைப்படத்திலும் நடித்தது நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இந்நிலையில், அஸ்வின் குமாருக்கு இன்று கோவையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அஸ்வின் குமார் திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் புவனேஸ்வரி. இவர் மறைந்த இயக்குநரான ராஜசேகரனின் பேத்தி என்று கூறப்படுகிறது. இயக்குநர் ராஜசேகரன் ரஜினி காந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர், தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட கூடிய இயக்குநராகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில் தனது 43-வது வயதில் உயிரிழந்தார்.
தற்போது இவரது பேத்தியான புவனேஸ்வரியைதான் அஸ்வின் திருமணம் செய்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அஸ்வின் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியானதுமே பலரும் மணப்பெண் யார்? என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்த நிலையில் தற்போது அவரே தனது மனைவியோடு எடுத்துள்ள புகைப்படத்தினை அதிகாரப்பூர்வ சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு வாழ்த்துகளோடு, லைக், கமெண்ட்ஸ் அள்ளி குவிந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.