சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், ஆகியோர் நடித்துள்ளனர்.
மோகன்லால், சிவ ராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹ்ரிதிக் ரோஷன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இவர்கள் எல்லாரையும் கடந்து பெரிய அளவில் பேசப்படும் கதாப்பாத்திரம் நமோ நாராயணா நடித்த பழக்கடை மூர்த்தி.
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள படத்தின் முதல் பாதி முழுவதையும் இயக்கும் சக்தியாக இருக்கிறது பழக்கடை மூர்த்தி பாத்திரம். நமோ நாராயணாவின் அசத்தலான ஸ்டைல், கச்சிதமான நகைச்சுவை உணர்வு மற்றும் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகள் ரசிகர்களை கைதட்டி விசிலடிக்க வைத்தன.
நடிப்பில் இவ்வளவு பெரிய பாராட்டுகளைப் பெற்றுவரும் நமோ நாராயணா ஒரு காலத்தில் வசதியான சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா. பஹ்ரைன், துபாய், மலேசியா மற்றும் அமெரிக்கா என பல நாடுகளில் பணியாற்றிய அவர், "நடிகராவேன் என நானே நினைக்கவில்லை" என ஒருமுறை பேசியிருக்கிறார்.
படித்து முடித்தபிறகு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் உதவி இயக்குனராக பணியாற்றத் தொடங்கியுள்ளார் நமோ நாராயணா. அவர் இருந்த உதவி இயக்குனர் குழுவில் அவர் மட்டுமே மென்பொருள் படித்தவராக இருந்துள்ளார்.
திரைத்துறையில் முன்னேறுவதற்கான பாதை தெளிவாக இல்லாததால், மென்பொருள் பணியில் இணைந்துள்ளார். வாரநாட்களில் மென்பொருள் பணியிலும் வார இறுதியில் சினிமாவிலும் கவனம் செலுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் வெளிநாடுகளுக்கு பணியாற்ற சென்றுவிட்டார்.
வசதியான வாழ்க்கை, அவர் நன்றாக சம்பாதித்தார், ஆனால் ஏதோ ஒன்று அவரைத் தொடர்ந்து அலைக்கழித்தது. ஒருபக்கம் பெருநிறுவன வேலை மறுபக்கம் திரைப்படத் துறை கனவு இரண்டுக்கும் நடுவில் தடுமாறியவர், அமெரிக்காவில் செட்டில் ஆக விசாவை கையில் பெற்றபிறகு அந்த திட்டத்தைக் கைவிட முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 10 ஆண்டுக்கான விசா கிடைத்துள்ளது. அங்கே வாழ்க்கையை செட்டில் செய்யலாம் என்ற பெரும்பாலானோரின் கனவு அவருக்கு பழித்த தருணத்தில், சினிமாவில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளது.
அவர் உதவி இயக்குனராக இருந்தபோது இயக்குநரும் நடிகருமான சமுத்திர கனியுடன் தொடர்பை வளர்த்துள்ளார்.
சமுத்திரக்கனி நாடோடிகள் படத்தை இயக்கும்போது தயாரிப்பாளர் ராயப்பன் மும்பையில் இருந்ததால் ஒரு நிர்வாக தயாரிப்பாளர் தேவை எழுயந்துள்ளது. அப்போது நம்பிக்கைக்குறியவராக இருந்த நமோ நாராயணா நிர்வாக தயாரிப்பாளராக சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.
ஒரு நேர்காணலில் "எனக்கு அமெரிக்க விசா கிடைத்த உடனேயே, சமுத்திரக்கனி 'நாடோடிகள்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப ஒருவரை அவர்கள் தேடினர். தங்களால் நம்பக்கூடிய ஒருவர் அவர்களுக்குத் தேவைப்பட்டார். அந்த நேரத்தில், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களின் நிர்வாகத் தயாரிப்பாளராக அவர்களுடன் இணைந்தேன்,” என்றார் நமோ.
நிர்வாக தயாரிப்பாளராக அவரது பணி குறித்து, "நான் காலை 7 மணி வரை வேலை செய்துவிட்டு, உறங்கிவிட்டு மதியம் திரும்புவேன். ஒருமுறை நான் திரும்பி வந்தபோது, ஒருவர் என் சூட்கேட்டைத் தூக்கிக்கொண்டு வர, மற்றொருவர் மற்ற வேலைகளில் எனக்கு உதவிக் கொண்டிருந்தார். இயக்குநரின் கூற்றுப்படி, நான் தாமதமாக வந்திருந்தேன். சசிகுமாரும் சமுத்திரக்கனியும், அவர்கள் படப்பிடிப்பிற்குப் போராடிக்கொண்டிருந்தபோது, நான் படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாக இருந்ததாக நினைத்தார்கள்." எனப் பேசியுள்ளார்.
படபிடிப்பு தளத்தில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்த இவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி, வேஷ்டி சட்டை அணிய வைத்துள்ளனர்.
அவரது நடிப்பு பிடித்து போகவே சமுத்திரக்கனி அந்த பாத்திரத்தை விரிவாக எழுதியுள்ளார். நாடோடிகள் படத்தில் அந்த பாத்திரம் பேசப்பட்டது. இப்படியாக மென்பொருள் பொறியாளர் நமோ நாராயணா 2009ம் ஆண்டு நடிகரானார்.
நடிகர் சசிகுமார் அறிவுறுத்தலின் படி, உடனடியாக அடுத்தடுத்த பாத்திரங்களில் நடிக்காமல் ஈஸ்வரன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் நமோ.
அதன்பிறகு, அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு படங்கள் வெளியாகின, 2014-ஆம் ஆண்டு வாக்கில் அந்த எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்தாக உயர்ந்தது. 2016-ஆம் ஆண்டில் மட்டும், அவர் எட்டு படங்களில் நடித்தார். கடந்த 15 ஆண்டுகளில், அவர் கிட்டத்தட்ட 80 படங்களில் ஒரு நடித்துள்ளார்.
தனது நகைச்சுவை உணர்விற்காக நீண்ட காலமாகப் பாராட்டப்பட்டு வந்தாலும், 'ஜெயிலர் 2' திரைப்படம் அவருக்குப் புதிய முகவரி அளித்துள்ளது. ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்துகொண்டு பழக்கடை மூர்த்தியாக பல இடங்களில் ஸ்கோர் செய்தார்.
இந்தக் கதாபாத்திரம் சமூக ஊடகங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியுள்ளது. பல பார்வையாளர்கள் மூர்த்தியை மையமாகக் கொண்ட ஒரு ஸ்பின்-ஆஃப் படத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.