சூப்பர் ஸ்டார் படங்களுக்கு மகுடம் சூட்டிய தேவா.. ”ஆட்டோக்காரன் முதல் டைட்டில் கார்டு வரை” - தேனிசை தென்றலின் மறக்க முடியாத இசைப் பயணம்!

தேவாவின் துள்ளலான பாடல்களும் மாஸ் பின்னணி இசையும் ரஜினியின் திரை ஆளுமைக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்தது...
Deva Rajinikanth Title Card Theme
Deva Rajinikanth Title Card Theme
Published on: 
Updated on: 
3 min read

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமான செய்தி திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் தேவாவின் இசைக்கு தனி இடம் உண்டு. அண்ணாமலை படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி, பாட்ஷா, அருணாசலம் எனத் தொடர்ந்தது. ரஜினியின் பெயர் திரையில் தோன்றும் தருணத்தை ரசிகர்களின் கொண்டாட்டமாக மாற்றிய டைட்டில் கார்டு இசை முதல், திரையரங்குகளை அதிரவைத்த மாஸ் பாடல்கள் வரை தேவாவின் இசை ரஜினியின் திரை ஆளுமைக்கு வலுசேர்த்தது. இன்று தேவா மறைந்தாலும், அவர் உருவாக்கிய அந்த இசை அடையாளம் ரசிகர்களின் நினைவுகளில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

குறிப்பாக அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட ரஜினியின் மாஸ் படங்களில் தேவாவின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக, பாட்ஷா படத்தில் இடம்பெற்ற “நான் ஆட்டோக்காரன்” பாடல், ரஜினியின் ஸ்டைலுக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்து பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் தொடங்கி, ரஜினிகாந்தின் அடுத்தடுத்த பல முக்கியமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்தார்.

ரஜினியின் திரைப்பயணத்தில் அவரது இசை முக்கியப் பங்கு வகித்த நிலையில், பின்னர் இசையமைப்பாளர் தேவாவுடனும் ரஜினிகாந்த் இணைந்து பணியாற்றினார். இருவரும் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் ரஜினியின் ஆரம்பகால திரைப்பயணத்திற்கு வலுசேர்த்ததைப் போலவே, தேவாவின் துள்ளலான பாடல்களும் மாஸ் பின்னணி இசையும் ரஜினியின் திரை ஆளுமைக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்தது.

டைட்டில் கார்டு இசை

ரஜினிகாந்தின் பெயர் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் பிரபலமான தீம் இசை, இன்றளவும் அவரது ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் முதலாக 1992-ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் இந்த இசை அடையாளம் உருவானது. படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா அமைத்த இந்த தீம் இசையுடன் ரஜினியின் பெயர் திரையில் தோன்றும் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பின்னர் வீரா, பாட்ஷா என தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படம் வரை அந்த டைட்டில் கார்டு பாணி தொடர்ந்து வருகிறது.

அண்ணாமலை

1992-ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை திரைப்படத்தில், ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் தேவாவின் கூட்டணி முதல் முறையாக அமைந்து மாபெரும் வெற்றி பெற்றது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம், ரஜினியின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்ததுடன், தேவாவுக்கும் ரஜினி படங்களில் தனித்துவமான இசையை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற “வந்தேண்டா பால்காரன்”, “கொண்டையில் தாழம்பூ” உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக, ரஜினியின் பெயர் திரையில் தோன்றும் தருணத்தில் ஒலிக்கும் தீம் இசை, இந்த படத்தில் தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் உருவான இசை அடையாளம், பின்னர் ரஜினியின் பல படங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று, அவரது திரை வருகையுடன் இணைந்த மறக்க முடியாத இசை அனுபவமாக மாறியது. இவ்வாறு, ரஜினி தேவா கூட்டணியின் முதல் படமான அண்ணாமலை, இருவரின் திரைப்பயணத்திலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது.

பாட்ஷாவில் மாஸ் காட்டிய தேவா

1995-ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில், மாணிக்கம் என்ற எளிமையான ஆட்டோ ஓட்டுநருக்குள் மறைந்திருக்கும் பாட்ஷாவின் அதிரடியான பின்னணியை ரஜினி தனது நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தப் படத்தில் தேவா இசையமைத்த “நான் ஆட்டோக்காரன்”, “ஸ்டைலு ஸ்டைலுதான்”, “ரா ரா ராமையா”, “அழகு அழகு நீ நடந்தால்” உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, “நான் ஆட்டோக்காரன்” பாடல் ரஜினியின் கதாபாத்திரத்துக்கும் அவரது தனித்துவமான ஸ்டைலுக்கும் பொருத்தமாக அமைந்தது.

பாடல்களைத் தாண்டி, படத்தின் அதிரடி காட்சிகளிலும் தேவாவின் பின்னணி இசை முக்கியப் பங்கு வகித்தது. மாணிக்கத்தின் அமைதியான வாழ்க்கையிலிருந்து பாட்ஷாவின் இன்னொரு முகம் வெளிப்படும் தருணங்களில் இசை ஏற்படுத்திய தாக்கம், படத்தின் மாஸ் அனுபவத்தை மேலும் வலுப்படுத்தியது.

அருணாச்சலம்

அண்ணாமலை மற்றும் பாட்ஷா படத்தை தொடர்ந்து 1997-ஆம் ஆண்டு வெளியான அருணாசலம் திரைப்படத்தில் மீண்டும் தேவா மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து பெரும் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான இப்படத்தில், ரஜினியின் நகைச்சுவை கலந்த நடிப்புக்கும் அதிரடியான காட்சிகளுக்கும் தேவாவின் இசை கூடுதல் வலுசேர்த்தது. குறிப்பாக, “அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா” என்ற பாடல் ரஜினியின் ஸ்டைலையும் மாஸ் ஆளுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல், படத்தின் மற்ற பாடல்களும் கதையின் வேகத்துக்கும் கதாபாத்திரங்களின் தன்மைக்கும் ஏற்ற வகையில் அமைந்திருந்தன. அண்ணாமலை, பாட்ஷா படங்களைத் தொடர்ந்து அருணாசலம் படத்திலும் ரஜினிக்கு ஏற்ற இசையை வழங்கிய தேவா, இந்தக் கூட்டணியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தார். ஆனால் அதன் பிறகு எதிர்பாராத விதமாக இவர்களது கூட்டணி அமையவில்லை.

ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் தேவா இசையமைத்த படங்கள் வெறும் திரைப்படங்களாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் நினைவுகளில் நீங்காத இசை அனுபவங்களாகவும் நிலைத்திருக்கின்றன. அண்ணாமலை படத்தில் உருவான டைட்டில் கார்டு இசை, பாட்ஷா படத்தின் “நான் ஆட்டோக்காரன்” பாடல், அருணாசலம் படத்தின் அதிரடியான இசை என தேவாவின் பங்களிப்புகள் ரஜினியின் மாஸ் திரை ஆளுமையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. ஒரு தலைமுறையையே தனது இசையால் உற்சாகப்படுத்திய தேவா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது மெட்டுகளும் இசை அடையாளங்களும் காலத்தைக் கடந்து வாழும். ரஜினியின் பெயர் திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும், அந்த இசையின் வழியாக தேவாவின் நினைவும் ரசிகர்களிடம் உயிர்ப்புடன் தொடரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com