நண்பர் அஜித் முதல்.. குட்டி ஸ்டோரி வரை - மலேசியாவில் கிளாப்ஸ் அள்ளிய விஜய்!
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் (Bukit Jalil) மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய், தனது அரசியல் பயணம், 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கை, மற்றும் 2026 தேர்தல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் பேசிய விஜய், "மலேசியாவில் தமிழர்கள் நாட்டின் தூண்களாக உள்ளனர்" என்று புகழாரம் சூட்டினார். மேலும், மலேசியாவிற்கு தான் பலமுறை படப்பிடிப்பிற்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், "நண்பர் அஜித் நடித்த 'பில்லா' போல, நானும் 'குருவி' படத்திற்காக இங்கு வந்துள்ளேன்" என்று அஜித்தை குறிப்பிட்டது அரங்கை அதிர வைத்தது.
இது என்னுடைய கடைசிப் படம் என்று சொல்லும்போது வலிக்கிறது. சினிமா எனக்கு ஒரு மாளிகையைத் தந்தது. ஆனால், எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன்," என்று உருக்கமாகப் பேசினார்.
அதேபோல், வழக்கம் போல் ஒரு குட்டி கதையை விஜய் கூறினார். அதில், மழையில் நனைந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குடையைக் கொடுக்கிறார். அந்தக் குடை கைமாறிப் பலரிடம் சென்று, இறுதியில் அந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கே வந்து சேர்கிறது. "முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்யுங்கள், செய்த தர்மம் தலைகாக்கும்" என்பதே இக்கதையின் நீதியாகக் கூறினார்.
தனது அரசியல் எதிரிகள் குறித்துப் பேசிய விஜய், "வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும். வலுவானவர்களை எதிர்க்கும் போதுதான் நமக்கும் அந்த வலு வரும்," என்றார். இறுதியில், "விஜய் தனியாக வருவாரா? அணியாக வருவாரா?" என்ற கேள்விக்கு, "33 ஆண்டுகளாக நான் அணியாகத்தான் (ரசிகர்களுடன்) வந்திருக்கிறேன். சஸ்பென்ஸில் தான் கிக் இருக்கும். 2026-ல் வரலாறு திரும்பும் (History Repeats Itself)!" என்று கூறி முடித்தார்.
இசையமைப்பாளர் அனிருத்தை 'MDS' (Musical Departmental Store) என்று வர்ணித்தார். வில்லன் பாபி தியோலிடம், "உங்கள் பழைய படங்களைப் பார்த்துதான் 'பிரியமுடன்', 'வில்லு' படங்களில் நடித்தேன்" என்று ஜாலியாக ஒப்புக்கொண்டார். இயக்குனர் ஹெச். வினோத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்
.png)
