

தமிழக அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் ஆகுமா அல்லது தள்ளிப் போகுமா என்கிற விவாதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். ஆனால், தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தாமதப்படுத்துவதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பி.டி. ஆஷா தான் இப்போது ஒட்டுமொத்த தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் நம்பிக்கையாக மாறியுள்ளார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து நீதிபதி எழுப்பிய அதிரடி கேள்விகள் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஏன் எல்லாமே 'அப்நார்மலாக' (Abnormal) நடக்கிறது என்று நீதிபதி கேட்டது பேசு பொருளாகியுள்ளது. இந்தப் படத்தில் அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருக்குமோ என்கிற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, நீதிபதியின் இந்தக் கேள்வி சற்றே ஆறுதலைத் தந்துள்ளது.
வழக்கின் பின்னணியைப் பார்த்தால், தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு முதலில் 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கப் பரிந்துரை செய்தது. ஆனால், திடீரென ஒரு உறுப்பினர் மட்டும் அளித்த புகாரை முன்வைத்து, படத்தை மறுசீராய்வு குழுவிற்கு (Review Committee) அனுப்பியது தான் பிரச்சனையின் ஆரம்பம். ஒரு பெரிய பட்ஜெட் படம், அதுவும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அதன் ரிலீஸ் தேதியைக் குறிவைத்து இப்படி முட்டுக்கட்டைகள் போடுவதை நீதிபதி கடுமையாகக் கண்டித்துள்ளார். தணிக்கை வாரியத்திற்கு வந்த அந்தப் புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி, நாளை மறுநாள் (ஜன.9) இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார்.
அந்தத் தீர்ப்பு தான் 'ஜனநாயகன்' படத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப் போனால் அல்லது ரிலீஸுக்குத் தடை விதிக்கப்பட்டால், அது படக்குழுவிற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஏற்கனவே திரையரங்க ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமைகள் அனைத்தும் ஜனவரி 9-ஆம் தேதியை முன்னிட்டே செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு திரையில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், செய்யும் ஒவ்வொரு செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. 'ஜனநாயகன்' படத்தில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கலாம் என்கிற அச்சத்தாலேயே சென்சார் போர்டு கெடுபிடி காட்டுவதாக ஒரு தரப்பு வாதிடுகிறது. எது எப்படியோ, நாளை நீதிபதி பி.டி. ஆஷா அளிக்கப் போகும் அந்தத் தீர்ப்புக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.