

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷி காந்த் உள்ளிட்டோர் நடித்து செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'டோரதி'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், முதலில் பலரால் எதிர்மறையான கருத்துக்களை பெற்று வந்தது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இந்த திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இதுமட்டுமின்றி திருநங்கைகளிடம் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தற்போது டோரதி திரைப்படத்தின் வெற்றி விழா நடந்து. அந்த விழாவில் திரைத்துறையினர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தை பாராட்டினார்கள். விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் திரைப்படத்தையும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையும் பாராட்டி இருந்தார். அதில் அவர் கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படம் மொக்கையாக இருந்துச்சு என்றும் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் பேசியிருந்தார். அவர் குறிப்பிடுவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2025 -ல் வெளியான ரெட்ரோ திரைப்படத்தை தான். இதனால் சூர்யாவின் ரசிகர்களின் கோவத்தை தூண்டியுள்ளார் என கூறப்படுகிறது.
விழாவில் அவர் பேசியதாவது “திருநங்கைகள் பற்றி இத்தனை நாட்களாக நமக்கு தெரியாமல் இருந்தது மிகப்பெரிய அசிங்கம், கேவலம். தூங்கிய இந்த சமுதாயத்தை கார்த்திக் சுப்புராஜ் என்கிற மகா கலைஞன் சுத்தியலால் அடித்து எழுப்பி இருக்கிறார். இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான (ரெட்ரோ) படத்தை பார்த்தேன். அது ஒரு மொக்கையான படம். கார்த்தியின் படங்களில் நான் முதலில் பார்த்தது அந்த படத்தைத்தான். அந்த படத்தில் நீண்ட நடனக் காட்சி, சண்டை எல்லாம் இருந்தது. உண்மையில் அது மிகவும் மொக்கையாக இருந்தது. அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
2025 வெளியான ரெட்ரோ திரைப்படம், வெளியாவதற்கு முன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி இருந்து என்றே சொல்லலாம். ஆனால் வெளியான பிறகு அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய மிஷ்கின், “நான் இதுக்கு முன்னாடி கார்த்திக் படத்தை பார்த்தது இல்லை… ஏன்னா எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. நான் பொழுதுபோக்கிற்காக தியேட்டர் போகமாட்ட, சாமிகளை கும்பிடுவதற்கு தான் தியேட்டருக்கு போறேன். இந்த படத்தில் சாமிகளை கும்பிட்டேன்” என்றே நெகிழ்ச்சியாக பேசினார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை, மகா கலைஞன் என்று புகழ்ந்த மிஷ்கின், “அவன் கால்ல விழுகிறேன் என்று சொன்னேன். நான் இப்ப கூட விழுந்துருவேன் ரொம்ப டிரமாட்டிக்கா இருக்கும். இன்னைக்கு நைட் ஆபீஸ்க்கு வரான். ரெண்டு ட்ரிங்க் போட்டு கால்ல விழுவேன். காலில் முத்தமிடுவேன். டோரதி படத்தை பார்த்துவிட்டு உடனடியாக நான் ஒரு வீடியோ போட்டேன். அந்த வீடியோவில் இளையராஜாவின் காலை முத்தமிட்டு இருக்கிறேன். இளையராஜாவுக்கு அடுத்து நான் கார்த்திக் சுப்பராஜ் காலை முத்தமிடுவேன் என சொல்லி இருந்தேன். ஒரு மகா கலைஞனை பாராட்டும்போது, அதை இன்ஸ்டால்மென்டில் பாராட்ட முடியாது. முழுமையாகத்தான் பாராட்ட வேண்டும்.
ஒரு முறை 14 டைரக்டர் மீட் பண்ணோம். அப்போ ஒரு டிஸ்கஷன் பேசும்போது, நான் இதுவரைக்கும் 30 வருஷத்துல கடைசி விவசாயி மற்றும் கொட்டுக்காளி தான் சிறந்த படம் என்று சொன்னேன். அது பெரிய விவாதமாக மாறியது. இப்போ ரெண்டு படத்தில் இன்னொரு படம் சேர்த்து அது டோரதி. இந்த 30 வருஷம் வந்த மிக முக்கியமான படங்கள் மட்டுமல்ல சிறந்த படங்களும் இந்த மூணு தான் அதுக்கு கீழதான் நாங்க என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்