

தமிழ் திரைப்பட துறையில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை குறித்த ட்வீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது அரசியல் பேசி சில விவாதங்களில் பங்கேற்று வந்தார். இவரின் அரசியல் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு மீண்டும் ஸ்பாட்லைட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று இவர் வெளியிட்ட X தள பதிவில், ஒரு திரைப்படம் குறித்து இயக்குனருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் “சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு இயக்குனராக.. நீங்கள் மிகத் தவறான முடிவை எடுத்து இருக்கிறீர்கள். நீங்களே அதை உணர்ந்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இது சமீபத்தில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்தை குறித்து, இயக்குனருக்கு கொடுத்துத்த அட்வைஸ் என அவரின் முந்தைய பதிவு தெளிவுபடுத்தியது. சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம், பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கலாச்சாரம் என இன்னமும் மனதால் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு இந்த திரைப்படம் குறிப்பாக கிளைமாக்ஸ் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய முகம் சுளிக்கும் வகையில் இருக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது. அவரவர் மனதிற்கு ஏற்றார் வாழ்வது தான் அவசியம் என்றும் கலாச்சார காவலர்களுக்கு பாடம் புகட்டியுள்ளது டோரதி. முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு இத்திரைப்படம் கொண்டாடக்கூடிய திரைப்படமாக மாறி வெற்றி திரைப்படமாக பல தரப்பினர் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.
டோரதி திரைப்படம் குறித்து தன்னுடைய விமர்சன பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “முதல் மூன்று நாட்கள் பல திசைகளிலும் இருந்து வந்த இப்படத்தின் விமர்சனங்களைக் கேட்டு கார்த்திக் சுப்புராஜ் இப்படிப் பலர் பேசும் அளவுக்குத் தவறு செய்துவிட்டாரே என்று நினைத்தேன், நேற்றிரவு படத்தைக் காணும் வரை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போதுதான் புரிகிறது, அவர் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்துவிட்டார், ஒன்றும் விளங்காத ஒரு சமூகத்துக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்து! அடிப்படை அறிவற்ற ஒரு கூட்டம் இந்த நல்ல படத்தைக் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாயிற்று. பொதுவெளியில் வந்த விமர்சனங்களைப் பார்த்தபோது இது ஏதோ ஓரின உறவைப் பற்றியது (Gay relationship) என்கிற உணர்வை உண்டாக்கியது. கார்த்திக் இதைத் தொடங்கிவைத்திருக்க வேண்டாமே என்று எனக்கும் தோன்றியது.
நானும் படத்தில் அப்படி ஏதோ கதையமைப்போ, காட்சியமைப்போ, வசனமோ வரும் என்று காத்திருந்து கடைசிவரை வராமல் போனபோது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினேன். சில மண்டுகள் இந்தப் படத்தைப் பார்த்து எதுவுமே விளங்காமல் பிதற்றியிருக்கின்றன என்பதை உணர சற்று நேரம் தேவைப்பட்டது. நாம் காலகாலமாகக் கண்டுவரும் ஓர் இயல்பான சமூக அம்சத்தை ஓர் அழுத்தமான கதையின் மூலம் உணர்வுபூர்வமாகத் தந்திருக்கிறார் கார்த்திக். அற்புதமான படம்!
படத்தின் மையக்கரு புலப்படத் தொடங்கிய நிமிடத்திலிருந்து நம் மனத்தில் பலவித எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுவதை உணரமுடிந்தது. இப்படியொரு மனித இனத்தின் நிஜ உணர்வுகளை இவ்வளவு காலம் கேலியிலும், கிண்டலிலும் பாழ்படுத்தி இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வோடு பயணிக்கத் தொடங்குகிறோம்.
கத்தியை எடுத்து அடுத்தவன் மார்பிலும் வயிற்றிலும் குத்திக் கிளறிவிட்டு, அந்தக் கத்தியை எடுத்து நாக்கில் வழித்து ரத்தத்தை நக்கும் அரக்கத்தனமான மிகைப்படுத்தல்களை ஹீரோக்கள் செய்வதைக் கைத்தட்டி வரவேற்கிற முட்டாள் சமூகத்துக்கு இந்தப் படம் தவறாகத் தெரிவது வியப்பல்ல.
ஒவ்வொரு உயிரின் உடலிலும் சுரப்பிகள் சுரக்கும் ரசாயனப் பொருட்கள் பல்வேறு வினைகளை நிகழ்த்துகின்றன. அதன்படிதான் நாம் சிந்திக்கிறோம், இயங்குகிறோம். அவை இயல்பான சமநிலையைத் தாண்டும்போது (hormonal imbalance) உடலில் இயல்புக்கு மாறான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆணாகப் பிறந்து வளர்கின்ற ஒருவன் மெல்லமெல்ல ஒரு பெண்ணாக உணரத்தொடங்குவதும், பெண் ஆணாக உணரத் தொடங்குவதும் இச்சை மாற்றம் அல்ல, அனிச்சை மாற்றம். இந்த அறிவியல் கோட்பாட்டின் விளைவுகளை ஒரு கற்பனைக் கதை மூலம், பொழுதுபோக்குக் கலை மூலம், உணர்வுகளோடு பிணைத்து சொல்லியிருப்பதுதான் "டோரதி".
‘டோரதி’ நல்ல படம் என்று குறிப்பிட்டு தொடங்கிய அவர் இங்கே அதை புரிந்து கொள்ள பெரும்பாண்மையான பார்வையாளர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் முட்டாள் சமூகம் என்று குறிப்பிட்ட அவர் இது வரை வெளியான வன்முறையான திரைப்படங்களி கொண்டாடிய மக்களுக்கு இந்த கதை புரிய வாய்ப்பில்லை என்பதை சொல்ல முற்படுகிறார். இதற்கு முன் தமிழ் சினிமாவில் இது போல் பாலின சமத்துவம் மற்றும் பாலின புரிதல் குறித்த திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ‘டோரதி’ திருநர், திருநங்கை மற்றும் Queer மக்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அவர்களின் உணர்வுகளை முழுமையாக பேசியுள்ளது என்பது முக்கிய அம்சம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்