‘டேர் டெவில்’ படத்தில் இணைந்த மலையாள ஆக்ஷன் ஹீரோ.. அஜித்துக்கு வில்லனாகிறாரா உண்ணி முகுந்தன்?

நடிகர் அஜித் தற்போது துபாயில் இருப்பதாகவும், நவம்பர் 6-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Unni Mukundan
Published on: 
Updated on: 
2 min read

அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரின் திரைப்படம் குறித்த அப்டேட்டிற்காகக் காத்திருந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 64-வது திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலையும் ஈட்டவில்லை. இருப்பினும், இந்தக் கூட்டணி மீண்டும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திற்காக இணையவுள்ளது. இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் மற்றும் மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இத்திரைப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்க உள்ளார். புதிதாகத் தொடங்கியுள்ள ‘பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக அஜித்தின் ‘டேர் டெவில்’ திரைப்படம் உருவாகவுள்ளது. நடிகர் அஜித் தற்போது துபாயில் இருப்பதாகவும், நவம்பர் 6-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. மலையாளத் திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், தனது அதிரடியான நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த உண்ணி முகுந்தன், கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘சீடன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் கவனம் செலுத்திய அவருக்கு, 2012-ம் ஆண்டு வெளியான ‘மல்லு சிங்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார். இதையடுத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த உண்ணி முகுந்தன், 2022-ம் ஆண்டு வெளியான ‘மாளிகப்புரம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். சுமார் ரூ.3.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிபெற்றது.

அதே ஆண்டில் சமந்தா நடிப்பில் வெளியான ‘யசோதா’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் கவனம் பெற்றார். தொடர்ந்து சசிகுமார் மற்றும் சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படத்தில் கருணா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, 2024-ம் ஆண்டு வெளியான ‘மார்கோ’ திரைப்படம் உண்ணி முகுந்தனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் ஸ்டைலிஷான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் உண்ணி முகுந்தன், தற்போது அஜித்தின் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆக்ஷன் கதாபாத்திரங்களில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.