நடிகை பிரியங்கா மோகன், கொரிய சுற்றுலா அமைப்பால் (KTO) கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு பிரியங்காவை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட அவர், கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்த தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக கொரிய அரசாங்கத்திற்கும் KTO-வுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரியங்கா, நீண்ட காலமாகத் தனக்கு உத்வேகம் அளித்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாட்டுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார். "இந்த அற்புதமான கௌரவத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்படுவது எனக்கு உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. கொரிய கலாச்சாரத்தை இந்தியப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவர உதவக்கூடிய ஒருவராக என்னை அங்கீகரித்த கொரிய அரசாங்கத்திற்கும் கொரிய சுற்றுலா அமைப்புக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் எழுதியுள்ளார்.
பிரியங்கா மோகன் இதைப்பற்றி மேலும் கூறுகையில், "கொரியாவின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் அன்பான உபசரிப்பு ஆகியவை என்னை எப்போதுமே ஊக்கப்படுத்தியுள்ளன. இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம்பிக்கை, கருணை மற்றும் அன்பான வரவேற்பு அளித்த கொரிய சுற்றுலா அமைப்பின் தலைவருக்கு மனமார்ந்த நன்றி. இனி வரவிருக்கும் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரியங்காவின் இந்த நியமனம், தென் கொரியாவுடனான அவரது வளர்ந்து வரும் தொடர்பில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது. முன்னதாக, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் கலந்துகொண்ட அரசு விருந்திற்காக புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். இது , அந்நாட்டுடனான அவரது கலாச்சார ஈடுபாட்டை மேலும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் கொரிய சுற்றுலாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியப் பிரபலங்களின் வளர்ந்து வரும் பட்டியலில் பிரியங்காவும் இணைந்துள்ளார். சில நடிகைகள் கொரிய கலாச்சாரத்தை விரும்பும் பட்டியலில் தற்போது பிரியங்காவும் இணைந்துள்ளார். நடிகை ஹினா கான் 2025 மே மாதம் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டார். மேலும், கே-நாடகங்கள் மற்றும் கே-பாப் கலாச்சாரத்தால் பிரபலமடைந்த இடங்கள் உட்பட, தென்கொரியாவின் அழகிய சுற்றுலாத் தலங்களை இந்தியப் பயணிகளிடம் தீவிரமாக இவர் விளம்பரப்படுத்தினார். தற்போது இந்தியாவில் கொரியா கலாச்சாரத்திற்கென்று ஒரு மிகப்பெரிய ரசிக பட்டாளமே இருக்கிறது. கொரிய உணவுமுறை, கொரிய உடைகள், கொரிய Skincare பொருட்கள், மிக முக்கியமாக K-pop நட்சத்திரங்கள் என்று பலவற்றிற்கு இந்தியாவில் பல இடங்களில் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் ரா. கார்த்திக் இயக்கிய படமான ' மேட் இன் கொரியா'வில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மார்ச் 12 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படத்தில், பிரியங்கா தனது காதலனால் ஏமாற்றப்பட்டு தென் கொரியாவில் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.
இது Netflix தளத்தில் வெளியாகி No#1 இடத்தை ட்ரெண்டிங்கில் பிடித்தது. தற்போது பிரியங்கா மோகனுக்கு கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.