பட ரிலீஸ் தேதி சிக்கலில்.. சூர்யாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தாரா தனுஷ்? - திடீர் அறிக்கையால் எழுந்த விவாதம்!

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியாகாது எனக் கூறியுள்ளார்.
Om Chapter 1 Postponed
Om Chapter 1 Postponed
Published on
Updated on
1 min read

நடிகரும், இயக்குநருமான தனுஷின் வரவிருக்கும் படமான 'ஓம்: சாப்டர் 1', திட்டமிட்டபடி 2026 அக்டோபர் 16 அன்று வெளியாகாது என தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ரஜினிகாந்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலும், முக்கிய நடிகரின் திரைப்படத்தின் வெளியீட்டுடனான மோதலைத் தவிர்ப்பதற்காகவும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக நடிகர் தனுஷ் அந்த அறிக்கையில் விளக்கியுள்ளார்.

தனுஷ் கதாநாயகனாக நடித்து 'அமரன்' திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, சாய் அபியங்கர் இசையமைத்து அக்டோபர் மாதம் 16-ம் தேதி வெளியாகும் என 'ஓம்' திரைப்படம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சரி, "அப்போ படம் தீபாவளிக்காவது வருமா?" என்று அவரது ரசிகர்கள் கேட்பார்கள் என்று முன்பே கணித்தாற்போல, தீபாவளிக்கு நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படமான 'சீன்' திரைப்படம் வெளியாவதால் அன்றும் திரைப்படம் வெளியாகாது என்று "எண்டு கார்டு" போட்டுள்ளார்.

தனது அறிக்கையில் அவர், இது போன்ற காலங்களில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை மாற்றுவது என்பது சவால்களைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக நாம் அனைவரும் போற்றி வணங்கி வரும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் திரைப்படம், நமது படத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகிறது. அவர் மீதுள்ள மிகுந்த மரியாதையின் காரணமாக, எங்களின் 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

அதே நேரத்தில், சூர்யா சாரின் படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிக்கும் நாங்கள் வரப்போவதில்லை. நியாயமாகப் பார்த்தால், அவர்கள்தான் தங்களது தேதியை முதலில் அறிவித்தார்கள். மேலும், சினிமா மற்றும் திரையுலகின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலுடன் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்களின் புதிய வெளியீட்டுத் தேதியை மிக விரைவில் அறிவிப்போம். ஓம் நமசிவாய, டி, எனக் குறிப்பிட்டு அந்த அறிக்கையை முடித்திருந்தார். இதனைபார்த்த பலரும், நடிகர் தனுஷ் நடிகர் சூர்யாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறாரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். இன்னொரு புறம், "யாருக்கும் பாதகம் இல்லாமல் தனுஷ் செல்ல நினைக்கிறார்" என்றும் பேசிவருகின்றனர்.

எது எப்படியோ, இந்த தீபாவளிக்கு தனுஷ் படம் இல்லை என்றாகிவிட்டது. அவரது படம் எப்போது வெளியாகும் என்பதை காலம்தான் முடிவெடுக்கும் போல.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com