

சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் 'படையப்பா' திரைப்படம், தமிழகத்திலும் உலக அளவிலும் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டம் குறித்துத் தயாரிப்பாளரும் திரைப்பட விமர்சகரான, 'வலைப்பேச்சு' அந்தணன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன. பொதுவாக ரஜினி குறித்து அதிகம் விமர்சனம் செய்யும் அந்தணன், படையப்பா படம் குறித்தும் ரஜினி குறித்தும் சிலாகித்து பேசியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் பேசுகையில், "படையப்பா படம் 1999-இல் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் என்ன உணர்வு இருந்ததோ, அதே உணர்வு இப்போதும் நிலவுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் திரையரங்குகள் தொடர்ந்து Housefull காட்சிகளாக ஓடுவது வியப்பை அளிக்கிறது. இன்றைய 'ஜென் சி கிட்ஸ்' என்று சொல்லப்படும் புதிய தலைமுறை இளைஞர்கள் கூட ரஜினியை ரசிப்பது வியப்பானது. ரஜினிக்கு முன்பாக 'பூமர்' (Boomer) போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் மதிப்பில்லை என்றும், ரஜினிக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட விஷயம் இது என்று தெரிவித்தார்.
மேலும், தயாரிப்பாளர் தேனப்பன், 'படையப்பா'வை ஒரு புதிய படம் போலத் தோன்றும் வகையில், டிஜிட்டல் மயமாக்கி மிகச் சிறப்பாக வெளியிட்டதே இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு கூடுதல் காரணம் ஆகும். "படையப்பா ஒரு மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது," என்று கூறிய அவர், ரஜினி தரப்பு ஆரம்பத்தில், திரையரங்கு உரிமையாளர்களின் பங்கு போக, சுமார் ₹10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் படம் போகிற வேகத்தைப் பார்த்தால், அதைவிடப் பயங்கரமான வசூல் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்
பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் கூட, ஆயிரம் பேர் வரை வெளியே காத்திருந்து படம் பார்த்தனர் என்றும், தொடர்ந்து மூன்று நாட்களாக அரங்கு நிறைந்த காட்சிகள் தொடர்ந்தன என்றும் அவர் உலகளாவிய வரவேற்பை உறுதிப்படுத்தினார். "எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினிக்குத்தான் இது நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ரஜினியை மூன்று தலைமுறையாக ரசிகர்கள் பார்க்கின்றனர் என்றும், இந்த இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அந்த வியப்பும் பரபரப்பும் சற்றும் குறையவில்லை என்றும் அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்